Published : 30 Oct 2025 08:10 AM 
 Last Updated : 30 Oct 2025 08:10 AM
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இம்முறை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை சேர்ந்த சுமார் 50 அதிருப்தி எம்எல்ஏக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்ஜேடி) சேர்ந்த 27 பேர் போட்டி வேட்பாளராகி உள்ளனர். இதையடுத்து ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) 16 பேரும் பாஜகவின் 6 பேரும் போட்டி வேட்பாளராக களம் காண்கின்றனர்.
இதனால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட இவர்கள் சுயேச்சையாகவோ அல்லது சிறிய கட்சிகள் சார்பிலோ போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு உள்ளுர்களில் குறிப்பிட்ட வாக்கு வங்கி இருப்பதால் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. இவர்கள் பெறும் சில ஆயிரம் வாக்குகளும் இரு கூட்டணிக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும். ஒரு கூட்டணியின் இழப்பு, மற்றொரு கூட்டணிக்கு பலனைத் தந்து விடும்.
கடந்த 2020 சட்டப்பேரவை தேர்தலில் சில நூறு அல்லது ஆயிரம் வாக்குகளில் மெகா கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மெகா கூட்டணி இழந்தது. கடந்த தேர்தலில் ஆர்ஜேடி 23.5%, பாஜக 19.8%, ஜேடியு 15.7%, எல்ஜேபி 5.8% வாக்குகள் பெற்றன. என்டிஏவை விட மெகா கூட்டணி 19 தொகுதிகள் மட்டுமே குறைவாக பெற்றது.
பிஹார் அரசியலில் தெளிவாக கணிக்க முடியாத நிலையே இருந்து வருகிறது. இம்முறை அதிருப்தி வேட்பாளர்களால் இது மேலும் அதிகரித்துவிட்டது. சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெறுவதுண்டு. 2020-ல் இவர்கள் 31 தொகுதிகளில் வென்றனர். இதுபோன்ற காரணங்களால் பிஹார் முடிவுகள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT