Published : 30 Oct 2025 07:25 AM 
 Last Updated : 30 Oct 2025 07:25 AM
அமராவதி: மோந்தா புயல் ஆந்திராவை புரட்டி போட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். வங்க கடலில் மையம் கொண்டிருந்த மோந்தா புயல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடந்தது.
அப்போது சுமார் 100 முதல் 110 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கோனசீமா, விசாகப்பட்டினம், விஜயநகரம், அம்பேத்கார், ஸ்ரீகாகுளம், பிரகாசம், கிருஷ்ணா, நெல்லூர், கோதாவரி மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக பல வீடுகள் நாசமடைந்தன. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. பல கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல கிராமங்கள், நகரங்கள் இருளில் மூழ்கின. கோனசீமா மாவட்டத்தில் மரம் விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. பல ஆயிரம் ஏக்கர் நெல், பருத்தி, மிளகாய், வாழை, பப்பாளி, தென்னை மரங்கள் அழிந்தன. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிர் சேதத்தை விட அதிகமாக பொருட்சேதத்தை இந்த மோந்தா புயல் ஏற்படுத்தி விட்டது. ஆந்திராவில் மோந்தா புயலால் 249 மண்டலங்கள், 48 நகராட்சிகள், 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக ஆந்திர அரசு, மத்திய அரசிடம் தெரியப்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் காணொலி மூலம் புயல் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். எங்கள் அரசு உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தரும் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு வருமாறு எடுத்துரைக்க வேண்டும்.
ரூ.1000 நிதியுதவி: வீடு, வாசல் இழந்த மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். அரசு தரப்பில் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். முகாம்களில் தங்கி உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1,000 வீதம் நிதி உதவி வழங்கி, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதிகபட்சமாக குடும்பத்துக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் வழங்குங்கள். புயல் வருவதை நாம் தடுக்க முடியாது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நாம் அதன் பாதிப்பை குறைத்து கொள்ள முடியும். தற்போது மோந்தா புயலால் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், பொருட் சேதம் மிக அதிகமாக உள்ளது.
கடைநிலை ஊழியர் முதற்கொண்டு முதல்வர் வரை அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டதன் விளைவாக மோந்தா புயலை சிறப்பாக எதிர்கொண்டோம்’’ என்றார். அதன் பின்னர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாபட்லா, பல்நாடு, கிருஷ்ணா, ஏலூரு, டாக்டர் பிஆர் அம்பேத்கார் ஆகிய மாவட்டங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT