Last Updated : 29 Oct, 2025 12:32 PM

 

Published : 29 Oct 2025 12:32 PM
Last Updated : 29 Oct 2025 12:32 PM

ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இன்று (அக்.,29) ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். இது வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுகிறது.

ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரஃபேல் போர் விமானத்தில் இன்று (அக்.29) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணம் செய்தார். இது வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, விமானப்படைத் தளபதி (CAS) ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் விமானப்படை நிலையத்தில் இருந்து, முர்முவை முறைப்படி வரவேற்று, மரியாதை செய்தார்.

இது தொடர்பாக நேற்று குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அக்டோபர் 29-ஆம் தேதி ஹரியானாவின் அம்பாலாவுக்குச் செல்கிறார். அங்கு அவர் ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்வார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி திரவுபதி முர்மு இன்று பயணம் செய்தார். இது வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, 2023-ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார். அவருக்கு முன்பு முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பயணித்திருந்தனர்.

பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரஃபேல் போர் விமானங்கள், கடந்த 2020-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரின்போது ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x