Published : 29 Oct 2025 09:12 AM
Last Updated : 29 Oct 2025 09:12 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் ஆண்டுதோறும் புஷ்கர் ஒட்டக கண்காட்சி நடைபெறும். இங்கு பல்வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு புஷ்கர் கண்காட்சியில் ரூ.15 கோடி மதிப்பிலான குதிரை இடம்பெற்றுள்ளது. சண்டிகரை சேர்ந்த கேரி கில் என்பவருக்குச் சொந்தமான இந்த இரண்டரை வயது குதிரைதான் கண்காட்சியில் இடம் பெற்று மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இதுகுறித்து குதிரையின் உரிமையாளர் கேரி கில் கூறியதாவது: மார்வாரி இனத்தைச் சேர்ந்த இந்த குதிரைக்கு ஷாபாஸ் என்று பெயர் வைத்துள்ளோம். பல்வேறு கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஷாபாஸ், பல விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த குதிரையை வாங்க போட்டி போடுகின்றனர். இதுவரை ரூ.9 கோடி வரை கேட்டு விட்டுச் சென்றுள்ளனர். இந்த குதிரை மூலம் இனப்பெருக்கம் செய்ய ரூ.2 லட்சம் கட்டணம் பெறுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதேபோல் ராஜஸ்தானைச் சேர்ந்த அன்மோல் என்ற எருமையின் விலை ரூ.23 கோடி என புஷ்கர் ஒட்டகக் கண்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இந்த அன்மோல் எருது கண்காட்சிக்கு வந்திருந்தது. இதுகுறித்து எருமையின் உரிமையாளர் கூறும்போது, “அன்மோல் எருமைக்கு தினந்தோறும் பாலில் நாட்டு நெய், உலர் பழங்கள் ஆகியவற்றை கலந்து சிறப்பு உணவாகத் தருகிறோம். 1,500 கிலோ எடை கொண்ட அன்மோல் எருமை இனப்பெருக்கம் மூலம் ஏராளமான பணத்தை ஈட்டி வருகிறது" என்றார்.
மேலும் ரூ.10 கோடி மதிப்பிலான பாதல் என்ற குதிரை, ரூ.25 லட்சம் மதிப்பிலான ராணா என்ற எருமையும் கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளன. இதுகுறித்து ராஜஸ்தான் மாநில கால்நடை வளர்ச்சித்துறை இணை இயக்குநர் டாக்டர் சுனில் கியா கூறும்போது, “கடந்த 23-ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி, வரும் நவம்பர் 7-ம் தேதி வரை நடைபெறும். இதுவரை, 3,021 கால்நடைகள் கண்காட்சிக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT