Published : 29 Oct 2025 08:51 AM
Last Updated : 29 Oct 2025 08:51 AM
புதுடெல்லி: டெல்லியில் நேற்று மேக விதைப்பு நடைமுறை மூலம் செயற்கை மழை பெய்விக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுமானப் பணியின்போது உரிய விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் பிஎஸ்-6 சரக்கு வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் நேற்றைய கணக்கீட்டின்படி காற்று தரக் குறியீடு 315 புள்ளிகளாக இருந்தது. இந்த காற்றை சுவாசித்தால் பொதுமக்களின் உடல் நலனுக்கு அதிக தீங்கு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். இந்த சூழலில் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் செயற்கை மழையை பெய்விக்க முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டார். இதற்காக கான்பூர் ஐஐடியின் உதவி கோரப்பட்டது. டெல்லி அரசு மற்றும் கான்பூர் ஐஐடி இணைந்து டெல்லியில் நேற்று செயற்கை மழையை பெய்விக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
உத்தர பிரதேசம் கான்பூரில் இருந்து செஸ்னா ரக விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. சுமார் 6,000 அடி உயரத்தில் பறந்த இந்த விமானம் டெல்லியின் புராரி, விஹார், கரோல் பாக் உள்ளிட்ட இடங்களில் மேகங்கள் மீது ரசாயனங்களை தூவியது. இந்த மேக விதைப்பு நடைமுறை வெற்றி அடைந்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று செயற்கை மழை பெய்தது.
இதுகுறித்து கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் கூறியதாவது: செஸ்னா விமானம் மூலம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த மேகங்கள் மீது சில்வர் அயோடைடு, சோடியம் குளோரைடு, பொட்டாசியம் அயோடைடு ஆகிய ரசாயனங்கள் தெளிக்கப்பட்டன. இதன்மூலம் மேக கூட்டங்கள் நீர்த் துளிகளாக மாறி மழை பெய்தது.
செயற்கை மழையை பெய்விக்க போதுமான மேகங்கள் தேவை. எனவே சாதகமான வானிலை நிலவும்போது டெல்லியில் செயற்கை மழையை பெய்விக்க முயற்சி மேற்கொள்ளப்படும். நவம்பர் 30-ம் தேதி வரை மேக விதைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும். இதன்மூலம் டெல்லி நகரின் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT