Published : 29 Oct 2025 08:25 AM
Last Updated : 29 Oct 2025 08:25 AM
புதுடெல்லி: உலகளவில் பயணிகள் விமான தயாரிப்பில் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவிடம் அனைத்து வளங்கள் இருந்தாலும் பல்வேறு இடையூறுகள் காரணமாக நீண்ட காலமாக பயணிகள் விமான தயாரிப்பை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வந்தது.
ஆனால், இப்போது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவும் உள்நாட்டில் பயணிகள் விமான தயாரிப்பை சாத்தியமாக்க உள்ளது. இதற்காக, ரஷ்யாவைச் சேர்ந்த பொது கூட்டு பங்கு நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் (பிஜேஎஸ்சி-யுஏசி) உடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனம் அக்டோபர் 27-ம் தேதி மாஸ்கோவில் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன்படி, எஸ்ஜே-100 பயணிகள் விமானத்தை எச்ஏஎல் உள்நாட்டில் தயாரிக்க உள்ளது.
எஸ்ஜே-100 பயணிகள் விமானம் இரட்டை இன்ஜின்களைக் கொண்டது. குறுகிய உடலமைப்பைக் கொண்ட இந்த ரக விமானம் தற்போது வரை 200 விமானங்கள் தயாரிக்கப்பட்டு உலகளவில் 16-க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் உடான் திட்டத்தின் குறுகிய தூர இணைப்புக்கு எஸ்ஜே-100 விமானம் மிக முக்கியமானதாக இருக்கும். உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்காக எஸ்ஜே-100 விமானங்களை உற்பத்தி செய்யும் உரிமத்தை எச்ஏஎல் கொண்டிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT