Last Updated : 28 Oct, 2025 11:45 AM

 

Published : 28 Oct 2025 11:45 AM
Last Updated : 28 Oct 2025 11:45 AM

தீவிரப் புயலாக வலுவடைந்தது ‘மோந்தா’ - ஆந்திராவில் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோத்தப்பட்டினம் கடற்கரையில் படகை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்கப் போராடும் மீனவர்கள்.

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மோந்தா' புயல் இன்று (அக்டோபர் 28) காலை தீவிரமான புயலாக வலுவடைந்துள்ளதால், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இன்று மாலை அல்லது இரவு காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே மோந்தா புயல் தீவிர புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல் மணிக்கு 15 கிமீ வேகத்தில் வடக்கு முதல் வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று (அக்டோபர் 28) காலை 5.30 மணியளவில் தீவிரப் புயலாக வலுவடைந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: மச்சிலிப்பட்டினத்திற்கு தெற்கே 190 கிமீ தொலைவிலும், காக்கிநாடாவுக்கு தெற்கே 270 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கே 340 கிமீ தொலைவிலும் காலை 5.30 மணியளவில் இந்த புயல் மையம் கொண்டிருந்தது. இன்று மாலை அல்லது இரவு காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே மோந்தா புயல் தீவிர புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 90-100 கிமீ முதல் 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தின் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

‘மோந்தா’ புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களை நிவாரண முகாம்களுக்கு மாற்றுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். புயலால் பாதிக்கப்பட கூடிய காக்கிநாடா மற்றும் கோனசீமா பகுதியில் இருந்து சுமார் 10,000 பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 126 கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள டோங்கராய் என்ற இடத்தில் சிலேறு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சிலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கட்டுப்பாட்டு அறை எண்கள்: ஆந்திராவில் புயல் பாதிப்பு குறித்த உதவிகளுக்கான கட்டுப்பட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சித்தூர் (08572-242777, 9491077325), நெல்லூர் (0861-2331261, 7995576699), காக்கிநாடா (0884-2356801), பாபட்லா (0863-2234014), குண்டூர் (0864-3220226), மற்றும் ஒய்எஸ்ஆர் கடப்பா (08562-246344).

தெற்கு ஒடிசாவை பதம் பார்க்கும் ‘மோந்தா’ - அதேபோல். ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட தெற்கு ஒடிசாவின் 8 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களிலிருந்து மக்களை வெளியேற்ற ஒடிசா அரசும் தயார் நிலையில் உள்ளது.

மல்கான்கிரி, ராயகடா, கோராபுட், கஜபதி, கஞ்சம், நபரங்பூர், காலாஹண்டி மற்றும் காந்தமாலில் 140 பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இதில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஒடிசா மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மொத்தம் 5000 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 30-ம் தேதி வரை ஒடிசாவில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளனர். கிழக்குக்கரை ரயில்வே நிறைய ரயில்களை ரத்து செய்துள்ளது. சிலவற்றின் சேவை மாற்றிவிடப்பட்டுள்ளது. சில ரயில்கள் முந்தைய ஸ்டேஷன்களோடு நிற்கும்படி செய்யப்பட்டுள்ளது. அக்.30 வரை அரசு ஊழியர்களின் விடுப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 7 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில், ‘செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னை பெருநகர மாநாகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

ரயில்வே வேண்டுகோள்: இதற்கிடையில் தெற்கு மத்திய ரயில்வே ( South Central Railway ) பயணிகள் அவசிய, அவசரச் சூழல் இருந்தால் மட்டுமே இன்று ரயில் பயணங்களை மேற்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x