Published : 28 Oct 2025 10:06 AM 
 Last Updated : 28 Oct 2025 10:06 AM
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, ஜன் சுராஜ் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது என்று ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கால கட்டங்களில் பாஜக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் அவர், ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த கட்சி போட்டியிடுகிறது.
இதுதொடர்பாக ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஜன் சுராஜ் கட்சிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி 3-வது இடத்துக்கு தள்ளப்படும்.
மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் அர்த்தமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலுவுக்கு மாற்றாக ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர். தற்போது பிஹார் அரசியலில் ஜன் சுராஜ் கால் பதித்திருக்கிறது. இதன்மூலம் பிஹாரில் புதிய வரலாறு எழுதப்படுகிறது.
பிஹார் அரசியலில் மிக நீண்ட காலமாக குழப்பம் நீடித்து வந்தது. லாலு ஆட்சியை விரும்பாதவர்கள் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக வாக்களித்தனர். பாஜக ஆட்சியை விரும்பாதவர்கள் லாலுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். வரும் தேர்தலில் ஜன் சுராஜுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
பிஹார் இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடாது. சொந்த மாநிலத்திலேயே அவர்களுக்கு வேலை கிடைக்க வழிவகை செய்யப்படும். தரமான கல்வி வழங்கப்படும். பிஹார் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT