Published : 28 Oct 2025 12:51 AM 
 Last Updated : 28 Oct 2025 12:51 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் தெருநாய்களால் ஏற்படும் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில் உரிய காலக்கெடுவுக்குள் பதில்மனு தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் வரும் நவ.3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சம்மன் பிறப்பித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தலைநகரான டெல்லியில் சிறுவர்களை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்து ரேபிஸ் தொற்று பரவியது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அந்தந்த மாநில தலைமைச் செயலர்கள் 8 வார காலத்தில் பதிலளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த ஆக.22-ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பதில் மனுஅப்போது இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், டெல்லி மாநகராட்சி தரப்பில் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், பிற மாநில தலைமைச் செயலர்கள் இப்படியொரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடப்பது தெரியாதா என்றும் அவர்கள் நாளேடுகளையும், சமூக வலைதளங்களையும் பார்ப்பது இல்லையா என்றும் கேள்வி எழுப்பினர். தெருநாய்கள் தினமும் சிறுவர், சிறுமியரை கடித்து துவம்சம் செய்கின்றன. அந்த சம்பவங்கள் தொடர் செய்திகளாக வரும்போது நமது நாட்டுக்கென உள்ள நன்மதிப்பு வெளிநாடுகளில் தவறாக சித்தரிக்கப்படுகிறது. அதுஒருபுறமிருக்க தெரு நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் நிலைமையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கலையரங்கில் விசாரணைஎனவே இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நோட்டீஸ் கிடைக்கப்பெறாவிட்டாலும் உரிய காலக்கெடுவுக்குள் பதில்மனு தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் வரும் நவ.3 அன்று ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற கலையரங்கில் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்து விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT