Last Updated : 27 Oct, 2025 11:22 AM

 

Published : 27 Oct 2025 11:22 AM
Last Updated : 27 Oct 2025 11:22 AM

அக்.28 காலை ‘மோந்தா’ தீவிரப் புயலாக வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

ஆந்திராவில் தயார் நிலையில் என்டிஆர்எஃப் வீரர்கள்.

புதுடெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ‘மோந்தா’ புயல் அக்.28-ம் தேதி காலை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளைக் கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘மோந்தா’ என்ற பெயரை தாய்லாந்து நாடு வழங்கியுள்ளது. ‘மோந்தா’ என்றால் அழகிய, நறுமணம் மிக்க மலர் என்று அர்த்தமாம். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ‘மோந்தா’ முதல் புயல் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை தீவிரப் புயலாக வலுப்பெறுகிறது... இந்நிலையில், இது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ‘மோந்தா’ புயல் அக்.28-ம் தேதி காலை தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். தற்போதைய நிலவரப்படி மணிக்கு 16 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் இந்தப் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இது மேலும், வடமேற்கு திசையிலேயே நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 28 காலையில் தீவிரப் புயலாக வலுப்பெறும். நாளை மாலை ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகாகுளம், விஜியநகரத்தில் உஷார் நிலை: தீவிரப் புயல் எச்சரிக்கையை ஒட்டி ஆந்திர மாநில அரசு ஸ்ரீகாகுளம், விஜியநகரம் மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முந்தைய புயல்களில் இந்த இரு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதைக் கணக்கில் கொண்டு கூடுதல் முன்னெச்சரிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த தீவிரப் புடல் காக்கிநாடா அருகே மச்சிலிபட்டினம் - கலிங்கபட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய புயல்களான லைலா, பைலின், ஆகியவை ஸ்ரீகாகுளத்தில் ஏற்படுத்திய சேதாரத்தின் அடிப்படையில் முன்னேற்படுகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாப்பு நாயுடு அதிகாரிகளுக்கு புயல் முன்னேற்பாடுகளை சிறப்பாகச் செய்யும்படி பணித்துள்ளார்.

ஸ்ரீகாகுள மாவட்டத்தைப் பொறுத்தவரை பைதிபீமாவரம் முதல் இச்சாபுரம் வரை 185 கிமீ தூரத்துக்கு கடற்கரை பகுதியாக உள்ளது. இதனால் அங்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ‘மோந்தா’ புயல் காரணமாக ஏற்கெனவே ஆந்திராவில் பரவலாக மழை பெய்துவருகிறது. ஆந்திராவின் 26 மாவட்டங்களில் 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திரக் கடற்கரையில் போலீஸார்

ஒடிசாவில் 15 மாவட்டங்களில் உஷார் நிலை: மோந்தா புயல் தீவிரமடைந்து ஆந்திராவில் தான் கரையைக் கடக்கும் என்று இப்போதைக்கு கணிக்கப்பட்டிருந்தாலும் கூட, ஒடிசாவின் கிழக்குப் பகுதியில் 15 மாவட்டங்களில் உஷார் நிலைக்கு தயாராகி வருகிறது. இதில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். நேற்று (ஞாயிறு) பிற்பகல் முதலே மக்களை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. புயல் பாதிப்பு இருக்கக் கூடிய பகுதிகளில் என்டிஆர்எஃப் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மல்கான்கிரி, கோராபுட், நாபாரங்பூர், ராயகடா, கஜபதி, கஞ்சம், காந்தமால், காலாஹண்டி மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

தமிழகத்தில் மழை எப்படி? - மோந்தா புயல் தற்போதைக்கு சென்னையிலிருந்து 580 கிமீ தொலைவில் நிலவுகிறது. இந்தப் புயல் ஆந்திரா நோக்கி நகர்வதால் தமிழகம் தீவிரப் புயல் பாதிப்பில் இருந்து தப்பியுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக மழை இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

மோந்தா புயலால் சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மோந்தா புயலால் சென்னையில் பரவலாக மழை இருக்கும். கூடவே குளிர் நிலவும். சென்னையைப் பொறுத்தவரை மிக கனமழைக்கு வாய்ப்பில்லை. 50 முதல் 70 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆந்திர மாநிலத்தை ஒட்டிய கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, புலிகாட் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x