Published : 27 Oct 2025 08:55 AM 
 Last Updated : 27 Oct 2025 08:55 AM
லக்னோ: டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவுக்கு சொகுசு பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. உ.பி. தலைநகர் லக்னோ வழியாக அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இரண்டு அடுக்கு படுக்கை வசதி கொண்ட அந்த சொகுசு பேருந்தில் 70 பயணிகள் இருந்தனர்.
ஆக்ரா - லக்னோ தேசிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ரேவ்ரி பகுதியில் உள்ள சுங்கச் சாவடி அருகே நேற்று அதிகாலை பேருந்து சென்றபோது திடீரென தீப்பிடித்தது. உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், பயணிகள் அனைவரையும் எழுப்பி அவசர அவசரமாக வெளியேற்றினார்.
அதற்குள் பேருந்து முழுவதும் தீப்பற்றி மளமளவென எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 70 பயணிகளும் உயிர்த்தப்பினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் ரேவ்ரி சுங்கச்சாவடிக்கு முன்பு 500 மீட்டர் தூரத்துக்குள் நடந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் பயணிகளை பத்திரமாக வெளியேற்றி உள்ளனர்’’ என்றனர்.
போலீஸார் கூறும்போது, ‘‘பேருந்தின் ஒரு டயரில் தீப்பிடித்துள்ளது. இதை உடனே பார்த்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி உள்ளார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தீயை அணைத்த பிறகு நெடுஞ்சாலையில் இருந்து பேருந்து அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது’’ என்றனர்.
ஆந்திராவில் 2 நாட்களுக்கு முன்னர் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து 20 பயணிகள் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT