Published : 27 Oct 2025 08:41 AM 
 Last Updated : 27 Oct 2025 08:41 AM
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம், ஜான்சர் - பவார் பகுதியில் உள்ளது கந்தார் கிராமம். பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் சமீபத்தில், பழங்குடியின தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள், தங்க நகைகள் அணிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள், தங்கத்தில் கம்மல், மூக்குத்தி, தாலி ஆகியவற்றை மட்டும் அணியலாம். மற்றபடி ஆடம்பரமான தங்க நகைகளை அணிய கூடாது. மீறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று கிராம தலைவர்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து கிராமத் தலைவர்கள் கூறியதாவது: திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஏழை மக்கள் கடன் வாங்கி செலவு செய்யும் நிலை உள்ளது. ஆடம்பர செலவு செய்வது, தங்க நகைகளை போட்டுக் கொண்டு தங்கள் பணக்காரத்தனத்தை காட்டுவது போன்றவற்றை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆரம், நெக்லஸ் போன்ற பெரிய பெரிய தங்க நகைகளை இனிமேல் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் அணிய கூடாது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழைகள் தங்கத்தை வாங்க முடியாது. அதனால் அவர்கள் கடன் வாங்கியாவது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க நினைக்கின்றனர். இதுபோன்ற ஆடம்பர கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
திருமணம் என்பது புனிதமான நிகழ்ச்சி. அது தங்கள் செல்வத்தை, பணக்காரத்தனத்தை காட்டும் மேடையாக மாற்றக் கூடாது. சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வரவேண்டும். அதற்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் அவசியம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஏழை - பணக்காரர் என்ற வேறுபாடு இருக்க கூடாது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு கிராமத் தலைவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT