Published : 27 Oct 2025 07:26 AM 
 Last Updated : 27 Oct 2025 07:26 AM
ஹைதராபாத்: ஆந்திராவில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கர்னூல் காவல் துறை உயர் அதிகாரி விக்ராந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் மிரியாலா லட்சுமய்யா கைது செய்யப்பட்டுள்ளார். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் போலியாக 10-ம் வகுப்பு சான்றிதழை தயார் செய்து கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தை பெற்றுள்ளதை புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். விதிகளின்படி, வாகனம் ஓட்டுபவர்கள் 8-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பெரும்பாலும் இந்த விதிகள் மீறப்படுகின்றன.
மேலும், இந்த விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த பைக்கில் வந்த இரண்டு பேர் சங்கர் மற்றும் சாமி குடிபோதையில் இருந்ததை தடயவியல் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இரவு முழுவதும் மது அருந்திய அவர்கள் அதிகாலை 2 மணி அளவில் பைக்கில் வீடு திரும்பியுள்ளனர். பைக்கில் பெட்ரோலை நிரப்பிவிட்டு சாலைபக்கம் திரும்பியபோதுதான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். உண்மையில் இது ஒரு விபத்து அல்ல. தடுக்கக்கூடிய படுகொலை. குடிபோதையில் வாகனம் ஓட்டும் பொறுப்பற்ற நபரின் செயலால் வந்த வினை. இதுபோன்றவர்களுக்கு கருணை காட்டக்கூடாது. இவ்வாறு விக்ராந்த் பாட்டீல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT