Published : 27 Oct 2025 06:55 AM 
 Last Updated : 27 Oct 2025 06:55 AM
புதுடெல்லி: 21-ம் நூற்றாண்டு இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு ஆகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆசியான் அமைப்பில் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது: உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதி மக்கள் இந்தியா, ஆசியான் நாடுகளில் வசிக்கின்றனர். இந்தியா, ஆசியான் நாடுகள் இடையே ஆழமான நட்புறவு நீடிக்கிறது. கலாச்சாரரீதியாக நாம் ஒரே பாதையில் பயணம் செய்கிறோம்.
இந்தியாவின் கிழக்கத்திய கொள்கையின்படி ஆசியான் நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பின் ஒத்துழைப்பால் இந்திய, பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய முடியும். குளோபல் சவுத் கூட்டமைப்பில் இந்தியாவும் ஆசியான் நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. வணிகரீதியாக மட்டுமன்றி கலாச்சாரரீதியாகவும் நாம் இணைந்திருக்கிறோம்.
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதிலும் பருவநிலை மாறுபாட்டை தடுப்பதிலும் இந்தியா, ஆசியான் அமைப்பு ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. பேரிடர் காலங்களிலும் இரு தரப்பும் பரஸ்பரம் உதவி செய்து வருகின்றன. கல்வி, சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், பசுமை எரிசக்தி, சைபர் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் இணைந்து செயல்படுகின்றன.
21-ம் நூற்றாண்டு இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு ஆகும். வரும் 2045-ம் ஆண்டுக்கான ஆசியான் அமைப்பின் தொலைநோக்கு திட்டங்கள் நிச்சயமாக நிறைவேறும். இதேபோல வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவும் உருவாகும். நாம் தோளோடு தோள் நின்று வெற்றிப் பயணத்தை தொடர்வோம். 
இவ்வாறு அவர் பேசினார்.
ஆசியான் உச்சி மாநாடு மற்றும் ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் பங்கேற்பது வழக்கம். ஆனால் முதல்முறையாக அவர் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
கோலாலம்பூரில் நேற்று தொடங்கிய உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார். வரிவிதிப்பு விவகாரம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்ட பிறகு அதிபர் ட்ரம்பை பிரதமர் மோடி சந்திக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்காரணமாகவே பிரதமர் மோடியின் மலேசிய பயணம் ரத்து செய்யப்பட்டது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT