Published : 26 Oct 2025 06:21 PM 
 Last Updated : 26 Oct 2025 06:21 PM
சென்னை: தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்தம் குறித்து மக்கள் மன்றத்தில் இருந்து வந்த விமர்சனக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, அந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அண்மையில் நடந்த சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதாவால் ஏற்படும் எதிர்விளைவுகள், அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக அமையும் என்பதையும், அடித்தட்டு உழைக்கும் மக்களின் கல்வி பெறும் உரிமையை மறுக்கும் என்பதை அரசின் கவனத்துக்கு எடுத்துக் கூறப்பட்டது.
கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்த நிலையில், அதன் நியாயத்தை உணர்ந்து, தமிழ்நாடு அரசு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற்று, மறுபரிசீலனை செய்வது என எடுத்துள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் நேற்று (25.10.2025) அறிவித்துள்ளார்.
அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதா மீது மக்கள் மன்றத்தில் இருந்து வந்த விமர்சனக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, சட்ட மசோதாவை திரும்பப் பெறும் அரசின் முடிவை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
அதே சமயம், திரும்பப் பெறப்பட்ட சட்ட திருத்தம் தொடர்பான மறுபரிசீலனை என்பது தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கொள்கையை உறுதி செய்து, மேலும் விரிவாக்கி, வலிமைப்படுத்தும் திசைவழியில் அமைந்து, உயர்கல்வி பொறுப்பை தமிழ்நாடு அரசே ஏற்க முன்வரும் வகையில் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT