Last Updated : 26 Oct, 2025 04:40 PM

6  

Published : 26 Oct 2025 04:40 PM
Last Updated : 26 Oct 2025 04:40 PM

மாணவர் சேர்க்கை இல்லாத 8,000 பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள்: மத்திய கல்வி அமைச்சகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 2024-25 கல்வியாண்டில் மட்டும் சுமார் 8,000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர தரவுகளில் தெரிவித்துள்ளது. இந்த பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி நாடு முழுவதும் சுமார் 7,993 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் சேர்க்கைகூட நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய கல்வி ஆண்டினை காட்டிலும் 38 சதவீதம் குறைவாகும். 2023-24 கல்வி ஆண்டில் 12,954 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என தகவல்.

2024-25 கல்வியாண்டில் ஒரு மாணவர் கூட சேராத இந்த 7,993 பள்ளிகளில் சுமார் 20,817 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் 17,965 ஆசிரியர்கள் மேற்குவங்க மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அதே போல தேசிய அளவில் மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகளின் எண்ணிக்கையிலும் மேற்கு வங்கம் 3,812 பள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

மாணவர் சேர்க்கை இல்லாத மாநிலங்களில் 2,245 பள்ளிகளுடன் தெலங்கானா இரண்டாம் இடத்தில் உள்ளது. மத்திய பிரதேசம் 463 பள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த பள்ளிகளில் தெலங்கானா மாநிலத்தில் 1,106 ஆசிரியர்களும், மத்திய பிரதேசத்தில் 223 ஆசிரியர்களும் பணியில் உள்ளனர். உத்தர பிரதேசத்தில் 81 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஓர் ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ள சுமார் ஒரு லட்சம் பள்ளிகளில் சுமார் 33 லட்சம் மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதில் ஆந்திரா முதலிடம் வகிக்கிறது. உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 2022-23 மற்றும் 2023-24 இடையிலான கல்வி ஆண்டினை ஒப்பிடும் போது இந்த காலகட்டத்தில் ஓர் ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 6 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா, மகாராஷ்டிரா, கோவா, அசாம், இமாச்சல், சத்தீஸ்கர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களிலும், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் இந்த வகை பள்ளிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x