Published : 26 Oct 2025 02:54 PM
Last Updated : 26 Oct 2025 02:54 PM

'வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும்' - 'மனதின் குரலில்' பிரதமர் அழைப்பு

பாட்னாவில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கவனித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிஹார் துணை முதல்வர் சம்ரத் சவுத்ரி மற்றும் பாஜகவினர்.

புதுடெல்லி: ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்ற பிறகு ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை அன்று வானொலி​யில் மனதின் குரல் என்ற நிகழ்ச்​சி​யில் நாட்டு மக்​களு​டன் உரை​யாடி வரு​கிறார். அதன்​படி 126-வது மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி இன்று பேசியிருந்தார்.

தனது 30 நிமிட உரையில் அவர் பேசியதாவது: “மனதின் குரலில் நாம் உரையாட இருக்கும் ஒரு விஷயம், அனைவரின் இதயங்களுக்கும் மிகவும் நெருக்கமானது. இந்த விஷயம் நமது தேசியப் பாடல் பற்றியது. பாரதத்தின் தேசியப் பாடலான வந்தே மாதரம் குறித்தது. இது எப்படிப்பட்ட பாடலென்றால், இதன் முதல் சொல்லே கூட நமது இதயங்களின் உணர்வுகளைக் கொள்ளை கொண்டு விடுகிறது. வந்தே மாதரம் என்ற இந்த ஒரு சொல்லிலே தான் எத்தனை உணர்வுகள், எத்தனை சக்திகள்.

இயல்பான வகையிலே இது நமக்கு பாரத தாயின் தாய்மை உணர்வை உணரச் செய்கிறது. இதுதான் பாரத தாயின் பிள்ளைகள் என்ற வகையில் நமது பொறுப்புக்களைப் பற்றி நமக்கு அறிவுறுத்துகிறது. கடினங்கள் நிறைந்த வேளையாக இருந்தால், வந்தேமாதரம் என்ற கோஷம், 140 கோடி நாட்டு மக்களுக்குள்ளே ஒற்றுமை சக்தியை நிரப்பி விடுகிறது.

தேசபக்தி, பாரத தாயின் அன்பு, சொற்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் என்றால், வந்தேமாதரம் அந்த வெளிப்படுத்த இயலா உணர்வுகளுக்கு வடிவம் தரும் பாடலாகும். பல நூற்றாண்டுக்கால அடிமைத்தனத்தில் சிதைந்து போயிருந்த பாரதத்தில் புதிய உயிர்ப்பை ஏற்படுத்த பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா அவர்கள் இதனை இயற்றினார். வந்தேமாதரம் 19-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருந்தாலும், இதன் உணர்வு பாரதத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, என்றும் அழியா விழிப்புணர்வோடு இணைந்தது.

‘மாதா பூமி: புத்ரோ அஹம் பிருதிவ்யா’ என்று வேதங்கள் முழங்கி, பாரதிய கலாச்சாரத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன. பங்கிம்சந்திரர், வந்தே மாதரம் பாடலை எழுதி, தாய்த்திருநாட்டிற்கும், அதன் குழந்தைகளுக்கும் இடையேயான உறவினை, உணர்வு உலகில் ஒரு மந்திரத்தின் வடிவிலே இறுகப் பிணைத்தார்.

நான் திடீரென்று வந்தே மாதரம் பற்றி ஏன் பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணமிடுவீர்கள். வரும் நவம்பர் 7-ம் தேதியன்று நம் வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டில் நுழைய இருக்கிறோம். 150 ஆண்டுகள் முன்பாக வந்தே மாதரம் இயற்றப்பட்டு, 1896-ம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் முதன்முறையாக இதனைப் பாடினார்.

வந்தே மாதரம் பாடலில் கோடிக்கணக்கான நாட்டுமக்கள் எப்போதுமே தேசபக்தியின் எல்லையில்லா உணர்வினை உணர்ந்தார்கள். நமது தலைமுறைகள் வந்தே மாதரத்தின் சொற்களிலே பாரதத்தின் உயிர்ப்புடைய, மகத்தான ரூபத்தைக் கண்டிருக்கிறார்கள்.

நாம் இப்படிப்பட்ட பாரத தேசத்தைப் படைக்க வேண்டும். நமது இந்த முயற்சிகளில் நமக்கு என்றைக்குமே கருத்தூக்கமாக வந்தே மாதரம் இருந்துவரும். அந்த வகையிலே நாம் வந்தேமாதரத்தின் 150-வது ஆண்டினை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக ஆக்க வேண்டும். வரவிருக்கும் தலைமுறையினருக்காக இந்தக் கலாச்சாரத் தொடரை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இனிவரும் காலங்களில் வந்தே மாதரத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் தேசத்தில் பல நடக்கும். நாட்டு மக்களான நாமனைவரும் வந்தே மாதரம் என்ற இந்த பெருமைமிகு பாடலின் பொருட்டு, உள்ளெழுச்சியோடு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

உங்களுடைய ஆலோசனைகளை #VandeMatram150 என்று ஹேஷ்டேகில் அனுப்புங்கள். நான் உங்களுடைய ஆலோசனைகளுக்காக காத்திருப்பேன், நாமனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தை வரலாற்றுப் பூர்வமானதாக மாற்றும் பணியில் ஈடுபடுவோம்” என்றார்.

இதோடு சத் பூஜை, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து நாட்டு மக்கள் கொண்டுள்ள பெருமிதம், மாவோயிசம், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம், சத்தீஸ்கரின் அம்பிகாபூரிலே உள்ள நெகிழிக் குப்பையை அகற்றும் வகையிலான குப்பைக் கஃபே, பெங்களூரூ ஏரிகள் மற்றும் குளங்களுக்கு புத்துயிர் அளித்து வரும் கபில் மற்றும் குழிவினர், குஜராத்தின் அலையாத்திக் காடுகள், சர்தார் படேலின் 150-வது பிறந்தநாள் குறித்தும் இதில் பிரதமர் மோடி பேசி இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x