Last Updated : 25 Oct, 2025 12:53 PM

4  

Published : 25 Oct 2025 12:53 PM
Last Updated : 25 Oct 2025 12:53 PM

''தலித் என்பதால் என்னை குறிவைக்கிறார்கள்'' - அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்பி உதித் ராஜ்

வீட்டுக்கு வெளியே கட்டிலில் அமர்ந்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் உதித் ராஜ்

புதுடெல்லி: தலித் என்பதால் தான் குறிவைக்கப்படுவதாக டெல்லியில் அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான உதித் ராஜ், 2014 முதல் 19 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பாஜகவில் இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த உதித் ராஜ், அக்கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் அணியின் தேசிய தலைவராக உள்ளார். இவரது மனைவி சீமா ராஜூம் ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். புதுடெல்லி, பண்டாரா பார்க்கில் C1/38 என்ற எண் கொண்ட அரசு பங்களா சீமா ராஜ்க்கு ஒதுக்கப்பட்டது.

ஓய்வு பெற்றதைத் தொடர்ந்தும் அரசு பங்களாவை காலி செய்யாததால், காலி செய்யச் சொல்லி மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர் காலி செய்ய அவகாசம் கோரியுள்ளார். அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரை காலி செய்யச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து சீமா ராஜ் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அரசு பங்களாவை காலி செய்ய தனக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரி உள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்த பொருட்களை அதிகாரிகள் வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து வைத்துவிட்டனர். இதனால், உதித் ராஜ், வீதியில் கட்டிலைப் போட்டு அங்கேயே தங்கியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதித் ராஜ், "சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சண்டிகரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பூன் குமாரின் தற்கொலை தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரி இருந்தேன். அவர்தான் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக உள்ளார். தற்போது நான் பழிவாங்கப்பட்டுள்ளேன்.

தலித் என்பதால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது ஷூ வீசப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். நான் தலித் என்பதால் எனக்கு எதிராகவும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. பூரண் குமாரைப் போல நான் தற்கொலை செய்து கொள்ள மோடி அரசு விரும்புகிறது. ஆனால், அது நடக்காது.

வீட்டை காலி செய்யும் விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. வரும் 28-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாதா? அப்படி என்ன அவசரம்? அரசு பங்களாக்களில் தங்கியுள்ள உயர் சாதியினர் பலருக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

மோடி அரசாங்கம் எனது வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து எறிந்துவிட்டது. இப்போது நான் என் வீட்டின் முன் சாலையில் இரவைக் கழித்தேன். ஒரு தலித் எம்பியாகவோ அல்லது தலைமை நீதிபதியாகவோ இருந்தாலும்கூட அவர்களுக்கு எதிரான செயல்கள் அப்படியேதான் இருக்கும். பாஜக தலைவர்களின் உத்தரவின்பேரில்தான் பொருட்கள் வலுக்கட்டாயமாக சாலையில் வீசப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x