Published : 25 Oct 2025 08:30 AM
Last Updated : 25 Oct 2025 08:30 AM
புதுடெல்லி: இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான பணியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு அரசு பணி ஆணையை வழங்கும் 17-வது ரோஜ்கர் மேளா ஜார்க்கண்ட் மாநில ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு ஒலிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
நாட்டில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் சிறந்த அரசாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு மத்திய அரசின் வேலையை வழங்குவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. 17-வது ரோஜ்கர் மேளாவில் 51 ஆயிரம் பேருக்கு பணியாணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தே.ஜ. கூட்டணி அரசு இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் வெளியுறவுக் கொள்கை கூட இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
இந்த நம்பிக்கையுடனும், கொள்கையுடனும், நாங்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருகிறோம். நமது ராஜதந்திர ஈடுபாடுகளும் உலகளாவிய ஒப்பந்தங்களும் இளைஞர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
ரோஜ்கர் மேளா மூலம் இதுவரை 11 லட்சம் பேருக்கு அரசு பணியாணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவில் நடுத்தர மற்றும் சிறிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அமைப்பதற்காக பிரேசில், சிங்கப்பூர், தென் கொரியா, கனடா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் நாட்டின் ஏற்றுமதி வலுப்படும். பல்வேறு துறைகளும் வளர்ச்சி அடையும். இந்த வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஜிஎஸ்டி-யில் அண்மையில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும். இதனால் நாட்டு மக்களின் பணம் சேமிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT