Published : 25 Oct 2025 07:35 AM
Last Updated : 25 Oct 2025 07:35 AM
புதுடெல்லி: நேர்மையாக வரி செலுத்துவோரிடம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்ணியத்துடனும், பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சிஜிஎஸ்டி கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் பேசியதாவது: ஜிஎஸ்டி அதிகாரிகளின் தவறான நடத்தை, கடமை தவறுதல் அல்லது நெறிமுறையற்ற போக்கை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் சரியான நேரத்தில் முடிக்கப்பட வேண்டும்.
வரி நிர்வாகத்தின் இலக்கு என்பது நேர்மையான வரி செலுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதுதான். ஜிஎஸ்டி அதிகாரிகள் வகுக்கப்பட்ட வரி விதிப்பு விதிகளைப் பின்பற்றி கருணையுடனும், மரியாதையுடனும் வரி செலுத்துவோரிடம் நடந்து கொள்ள வேண்டும்.
ஜிஎஸ்டி அதிகாரிகளைப் பொருத்தவரையில் கண்ணியத்துடன் இருப்பது முக்கியம். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி என்பது விகிதங்கள், அடுக்குகள், எளிமைப்படுத்துதல் மட்டுமல்ல. வரி செலுத்துவோருக்கு வித்தியாசமான உணர்வை தர வேண்டும்.
நேர்மையான வரி செலுத்துவோர் கவுரவமாக நடத்தப்பட வேண்டும் என்று வாதிடப்படும் அதே வேளையில் கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்த தவறக்கூடாது. அனைவரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டாம் என்பதே எனது எண்ணம்.
வரி செலுத்துவோர் மீதான சுமையை குறைக்க விரைவான பதிவு ஒப்புதல்கள் மற்றும் குறைகளை தீர்க்க ஜிஎஸ்டி அதிகாரிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT