Published : 25 Oct 2025 07:18 AM
Last Updated : 25 Oct 2025 07:18 AM
சமஸ்திபூர்: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வரலாறு காணாத வெற்றி பெறும். அனைத்து தேர்தல் சாதனைகளையும் என்டிஏ முறியடிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். பிஹாரின் சமஸ்திபூர், பேகுசராயில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு கடந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரது வழிகாட்டுதல்களின்படி ஏழைகளின் முன்னேற்றத்துக்காக என்டிஏ அரசு அயராது பாடுபட்டு வருகிறது.
பிஹார் மாநிலத்தை சேர்ந்த 1.2 கோடி பெண்கள் சுய தொழில் தொடங்க அவர்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. குறு, சிறு விவசாயிகளுக்கு நிதியுதவி மற்றும் இளஞர்களின் வேலைவாய்ப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிஹாரில் ஏழைகள், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பல ஆயிரம் கோடி ஊழல் வழக்குகளில் தொடர்புடைய ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜாமீனில் வெளியே நடமாடுகின்றனர். அவர்கள் அமைத்திருப்பது மெகா கூட்டணி கிடையாது. மெகா ஊழல்வாதிகளின் கூட்டணி ஆகும்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மாநில மக்களின் முன்னேற்றத்துக்காக இரவு, பகலாக உழைத்து வருகிறார். அவரது தலைமையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமச்சீராக முன்னேற்றம் அடைந்து வருகின்றன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் சந்திப்போம்.
ஆர்ஜேடி, காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கு மக்கள் நலனில் துளியும் அக்கறை கிடையாது. தங்கள் குடும்ப நலன்களில் மட்டுமே அவர்கள் அக்கறை செலுத்துவார்கள். தேசிய அளவில் மிகப்பெரிய ஊழல் குடும்பமாக காங்கிரஸ் தலைமையின் (சோனியா காந்தி) குடும்பம் உள்ளது. இதேபோல பிஹார் அளவில் மிகப்பெரிய ஊழல் குடும்பமாக ஆர்ஜேடி தலைமையின் (லாலு பிரசாத்) குடும்பம் விளங்குகிறது. இரு குடும்பங்களை சேர்ந்தவர்களும் ஊழல் வழக்குகளில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக பிஹார் தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெறவில்லை. ஆர்ஜேடியின் கடந்த கால காட்டாட்சியை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும். அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடிக்கும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஆர்ஜேடி உடன் கைகோத்தது தவறு: பிஹாரின் சமஸ்திபூரில் நடந்த என்டிஏ பிரச்சார கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது: ஆர்ஜேடியின் 15 ஆண்டு கால ஆட்சியில் பிஹார் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. கடந்த 2005-ம் ஆண்டில் பிஹாரில் என்டிஏ ஆட்சிப் பொறுப்பேற்றது.
அப்போதுமுதல் மாநிலம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நான் இருமுறை ஆர்ஜேடி உடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டேன். அந்த தவறை இனிமேல் செய்ய மாட்டேன். இவ்வாறு முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT