Published : 24 Oct 2025 08:18 AM
Last Updated : 24 Oct 2025 08:18 AM
புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காலேஷ்வர் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை தலைப்பாகை அணிவதில் 2 பூசாரிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சம்பவத்தில் ரிம்முக்தேஷ்வர் கோயில் தலைவர் மகாவீர் நாத், தனது சக துறவி சங்கர் நாத்துடன் பூஜை செய்ய கருவறைக்கு வந்தார். அப்போது மகாவீர் நாத் பாரம்பரிய தலைப்பாகை அணிந்திருந்தார். அதைப் பார்த்த அங்கிருந்த பூசாரி மகேஷ் சர்மா, தலைப்பாகையை அகற்றும்படி தெரிவித்தார். மகாகாலேஷ்வருக்கு முன்பு தலைப்பாகை அணிவது கோயில் மரபுக்கு எதிரானது என்று கூறினார். இதற்கு மகாவீர் நாத் மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், பூசாரி மகேஷ் சர்மா தனது தலைப்பாகையை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றதாகவும், சக துறவியைத் தள்ளிவிட்டதாகவும் மகாவீர் நாத் குற்றம் சாட்டினார். அதற்கு, பூசாரி மகேஷ் சர்மா தன்னை தாக்க வந்தமையால் தற்காப்புக்காக இதை செய்ததாகப் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து துறவிகள் சிலர் ஆசிரமத்தில் கூடி, பூசாரி மகேஷ் சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரினர். பர்த்ரிஹரி குகைகளின் தலைமை பூசாரி பீர் மஹந்த் ராம்நாத், கோயில் நிர்வாகம் கருவறையின் சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்று கோரினார்.
இதுகுறித்து கோயில் தலைமை நிர்வாகி பிரதம் கவுசிக் கூறுகையில், ‘‘சிசிடிவி காட்சிகள் மற்றும் இரு தரப்பினரின் அறிக்கைகளை ஆராய்ந்து வருகிறோம். உண்மை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT