Published : 24 Oct 2025 08:06 AM
Last Updated : 24 Oct 2025 08:06 AM
புதுடெல்லி: நூறு ஆண்டுகள் ஆனாலும் பிஹாரில் ஆர்ஜேடி கட்சியின் காட்டாட்சியை மக்களால் மறக்கவே முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி அவ்வப்போது காணொலி வாயிலாக கலந்துரையாடி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ‘எனது பூத் மிகவும் வலிமையானது’ என்ற தலைப்பில் பாஜக தொண்டர்களுடன் அவர் நேற்று மாலை காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பிஹாரில் லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடி கட்சியின் கடந்த கால காட்டாட்சியை நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்களால் மறக்கவே முடியாது. அப்போது அனைத்து துறைகளிலும் ஊழல் வியாபித்து பரவி இருந்தது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
தற்போது பிஹார் மாநில எதிர்க்கட்சிகள் தங்களது கடந்த கால தவறுகளை மறைக்க தீவிர முயற்சி செய்கின்றன. ஆனால் அவர்களின் தவறுகளை மன்னிக்க மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை. கடந்த காலங்களில் பிஹாரில் காட்டாட்சி அமைவதை தடுத்து நிறுத்தினோம். வரும் தேர்தலிலும் தடுத்து நிறுத்துவோம்.
எதிர்க்கட்சிகள் தங்களை மெகா கூட்டணி என்று அழைத்துக் கொள்கின்றனர். உண்மையை சொல்வதென்றால், அவர்கள் மெகா ஊழல் கூட்டணி. வரும் தேர்தலில் இந்த ஊழல் கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்.
பிஹாரில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. இந்த அத்தியாயத்தில் இளைஞர்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் உறுதுணையாக உள்ளனர். தேர்தல் காலத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியின் நலத்திட்டங்கள் குறித்து பாஜக தொண்டர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.
பாஜக ஆட்சிக் காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து மாவோயிஸ்ட், நக்சல் தீவிரவாதம் வேரறுக்கப்பட்டு வருகிறது.
பிஹாரில் சுமார் 1.2 கோடி பெண்கள் தொழில் தொடங்க ஏதுவாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் அண்மையில் தலா ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டது. பிஹார் இளைஞர்களின் கனவுகள் நனவாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறு, சிறு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவாக வாக்களிப்பார்கள். மாநிலத்தில் என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். இதன்மூலம் பெண்கள் முன்னேற்றத்தில் புதிய யுகம் தொடங்கும். வரும் நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT