Published : 24 Oct 2025 07:56 AM
Last Updated : 24 Oct 2025 07:56 AM
திருவனந்தபுரம்: இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிகத் தலைவரான ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டார்.
கேரளாவின் வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் ஸ்ரீ நாராயண குருவின் மகா சமாதி நூற்றாண்டு நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று பேசியதாவது:
மக்களை அறியாமை, மூடநம்பிக்கை எனும் இருளில் இருந்து விடுவிக்க குரு தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஒவ்வொரு மனிதரிடமும் தெய்வீகத்தை காண தூண்டுகோலாக விளங்கினார். சமத்துவம், ஒற்றுமை, மனிதகுலம் மீதான அன்பு ஆகிய கொள்கைகளில் நம்பிக்கை கொள்ள பல தலைமுறைகளை அவர் ஊக்குவித்தார்.
ஒரே சாதி, ஒரே மதம், மனித குலத்துக்கு ஒரே கடவுள் என்ற அவரது சக்திவாய்ந்த போதனைகள், மூடநம்பிக்கை, சாதி, மதம் என அனைத்து தடைகளையும் தகர்த்தது. உண்மையான விடுதலை, அறிவு மற்றும் இரக்கத்திலிருந்து வருகிறது, குருட்டு நம்பிக்கையில் இருந்து அல்ல என்று அவர் நம்பினார்.
கோயில்கள், பள்ளிகள் மற்றும் அமைப்புகளை அவர் நிறுவினார். அவை கற்றல் மற்றும் தார்மீக வளர்ச்சிக்கான மையங்களாக செயல்பட்டன. இந்த அமைப்புகள் மூலம், ஒடுக்கப்பட்ட சமூகங்களிடையே எழுத்தறிவு, தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்க நெறிகளை அவர் ஊக்குவித்தார். இந்த நவீன உலகிலும் அவரது போதனைகள் முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானவை. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதைக்கான அவரது அழைப்பு மனிதகுலம் எதிர்கொள்ளும் மோதல்களுக்கு காலத்தால் அழியாத தீர்வை வழங்கக் கூடியவை. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT