Published : 24 Oct 2025 07:08 AM
Last Updated : 24 Oct 2025 07:08 AM
புதுடெல்லி: ஆசியான்- இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்கிறார்.
ஆசியான் அமைப்பில் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 26-ம் தேதி ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். ஆசியான் அமைப்புக்கு மலேசியா தலைமையேற்று இருக்கிறது. இதற்காக வாழ்த்து தெரிவித்தேன். ஆசியான்- இந்தியா உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளேன். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த புதன்கிழமை இரவு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். மலேசியா, இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தோம். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, பிராந்திய பாதுகாப்பு ஆகிய துறைகளில் மலேசியா, இந்தியா இணைந்து செயல்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகை காலம் என்பதால் ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளார். அவரது முடிவை மதிக்கிறேன். பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் வருகை.. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதன் காரணமாகவே பிரதமர் நரேந்திர மோடி மலேசியா பயணத்தை ரத்து செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி ஆசியான் உச்சி மாநாடு, ஆசியான்- இந்தியா உச்சி மாநாடுகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். அவரது முயற்சியால் கடந்த 2014-ம் ஆண்டில் ஆசியான் அமைப்பு, இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சூழலில் முதல்முறையாக ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கவே அவரது மலேசிய பயணம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ச்சியாக கூறி வருகிறார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க மலேசிய பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்திருக்கிறார். இவ்வாறு அரசி
யல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT