Published : 23 Oct 2025 06:13 PM
Last Updated : 23 Oct 2025 06:13 PM
பாட்னா: ஊழல் வழக்கை எதிர்கொள்ளும் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதா என பாஜக கேள்வி எழுப்பிய நிலையில், அவர் குற்றம் சாட்டப்பட்டவர்தான் என்றும் குற்றவாளி அல்ல என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட், “குற்றம் சாட்டப்பட்டிருப்பது வேறு; தண்டனை விதிக்கப்படுவது வேறு. ஒருவர் தண்டிக்கப்படாதபோது, அதன் விளைவுகளை எவ்வாறு முன்கூட்டியே கணிக்க முடியும்? உங்கள் (என்டிஏ) வேட்பாளர்களில் எத்தனை பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள். தேஜஸ்வி யாதவ் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
தேர்தல்களின்போது பெருமை பேசும் பாஜகவினர், நேர்மையற்ற முறையில் வெற்றி பெற முயல்கிறார்கள். இதற்கு ராஜஸ்தான் ஒரு உதாரணம். காங்கிரஸ் ஆட்சியின்போது ராஜஸ்தான் குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூறியதில் எந்த உண்மையும் இல்லை.
தேர்தல் ஆணையம், அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட முதன்மை நிறுவனங்கள் அழுத்தத்தின் கீழ் செயல்படுகின்றன. அப்படியானால் ஜனநாயகம் எப்படி இருக்கும்? இது குறித்து பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாகட்பந்தனின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ்வை, அசோக் கெலாட் இன்று காலை அறிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத், "தேஜஸ்வி யாதவ் என்ன சொல்கிறார் என்று முதலில் அவருக்குப் புரிகிறதா? அவரது தந்தைக்கு மாட்டுத் தீவன ஊழலின் நான்கு வழக்குகளில் 32.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளார்.
தேஜஸ்வி யாதவ் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. ஐஆர்சிடிசி ஹோட்டல் டெண்டர் முறைகேடு வழக்கில் ஐபிசி பிரிவு 420-ன் கீழ் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிஹாரின் வளர்ச்சிக்கு யார் பங்களித்திருக்கிறார்கள் என்பது பிஹார் மக்களுக்கு நன்கு தெரியும். தேஜஸ்வி யாதவ் மீது பிஹார் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. பிரதமர் மோடியும், நிதிஷ் குமாரும் பிஹாரை வளர்ப்பார்கள். இவர்களின் இரட்டைஇன்ஜின் அரசாங்கத்தையே பிஹார் விரும்புகிறது.” என்று தெரிவித்திருந்தார்.
பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகட்பந்தனில் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT