Published : 23 Oct 2025 03:52 PM
Last Updated : 23 Oct 2025 03:52 PM
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கோயிலின் வழக்கங்களை மீறியதாக கேரளாவைச் சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில், “உயர் நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளின்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோயிலின் வழக்கங்களை வெளிப்படையாக மீறிவிட்டார். இந்த மரபு மீறலுக்கு சீருடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த மீறலுக்கு பரிகாரம் செய்யும் விதமாக காங்கிரஸ் அல்லது பாஜகவினர் ஏன் இன்னும் நாம ஜபம் செய்யவில்லை? முதல்வர் பினராயி விஜயன் அல்லது கேரள அமைச்சர்கள் யாராவது இப்படி நடந்து கொண்டிருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருந்திருக்கும்?” எனப் பதிவிட்டுள்ளார்.
துணை காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமாரின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். மேலும், ஆலத்தூரில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மனோஜ் குமார் விளக்கம் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜித் குமார் உத்தரவிட்டுள்ளார். மனோஜ் குமாரின் பதிவு நடத்தை விதிகளை மீறும் செயல் என்றும் அவர் அளிக்கும் விளக்கத்துக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த பின்னணியில், தான் தவறுதலாக அந்த பதிவை இட்டுவிட்டதாக மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். “ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எனது வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதை ஓபன் செய்து படித்துக்கொண்டிருந்தபோது தவறுதலாக அது ஸ்டேட்டஸ் ஆக மாறி உள்ளது. அதுபற்றி எனக்குத் தெரியாது. எனது நண்பர்கள் சிலர் தொலைபேசி மூலம் அதனை சுட்டிக்காட்டிய பிறகே தவறு நிகழ்ந்ததை அறிந்தேன். உடனடியாக அதனை டெலீட் செய்துவிட்டேன்” என மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT