Published : 22 Oct 2025 08:12 AM
Last Updated : 22 Oct 2025 08:12 AM
புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் புனேவின் சனிவார் வாடாவில் வரலாற்று சிறப்புமிக்க பேஷ்வாவின் கோட்டை அமைந்துள்ளது. இதனுள் முஸ்லிம் பெண்கள் தொழுகை நடத்தும் வீடியோ கடந்த ஞாயிறு அன்று வெளியானது.
புனேவின் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மேதா குல்கர்னி தனது சமூக ஊடகப் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார். வரலாற்று பாரம்பரியம் அவமதிக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டு, போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சனிவார் வாடா வளாகத்தின், பிரார்த்தனை தளத்தில் கோமியம் மற்றும் பசுஞ் சாணம் தெளித்து புனிதப்படுத்த அவர் அழைப்பு விடுத்தார். அவர் இந்துத்துவாவினருடன் இணைந்து தீவிரப் போராட்டத்தில் இறங்கினார். குல்கர்னி தலைமையிலான இப்போராட்டத்தில் பல்வேறு இந்து அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் கோமியம் தெளித்து, சிவபெருமானுக்கு பிரார்த்தனை செய்து, பிரார்த்தனைப் பகுதியை புனிதப்படுத்தினர். ‘சனிவார் வாடா இந்துக்களுடையது, அது பேஷ்வாக்களின் பெருமை’ என கோஷங்களை எழுப்பினர்.
சனிவார் வாடாவுக்கு வெளியே அமைந்துள்ள ஹஸ்ரத் காஜா சையத் தர்கா அருகே இந்துத்துவாவினர் போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் தடியடி நடத்தி போராட்டகாரர்களை விரட்ட முயன்றனர்.
இதுகுறித்து புனே காவல்துறை துணை ஆணையர் கிருஷ்ணகேஷ் ராவலே கூறும்போது, ‘சனிவார் வாடா மகாராஷ்டிராவின் வரலாற்றுச் சின்னம். எந்த மதத்தின் மத நிகழ்வுகளும் இங்கு நடத்தப்படக்கூடாது. சனிவர் வாடா இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ளது. எனவே, அத்துறையுடன் ஆலோசித்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
பாஜக எம்பி குல்கர்னியின் நடவடிக்கையை, மகராஷ்டிராவின் எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. துணை முதல்வரான அஜீத்பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் கட்சி, குல்கர்னி மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியது.
இந்து-முஸ்லீம் இடையே பதற்றத்தைத் குல்கர்னி தூண்டி வருகிறார் என என்சிபி தலைவர் ரூபாலி தோம்பரே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT