Published : 22 Oct 2025 05:12 AM
Last Updated : 22 Oct 2025 05:12 AM
ஆக்ரா: தீபாவளி போனஸ் தராததால் அதிருப்தி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் பகுதியில் சுங்கச் சாவடி உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் சுங்கச்சாவடியை வாகனங்கள் கடப்பதற்கு வசதியாக அனைத்து கதவுகளையும் திறந்து விட்டனர்.
அதில் இருபுறமும் வாகனங்கள் அவசர அவசரமாக கடந்து செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாயின. ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலை மட்டுமன்றி டெல்லி செல்லும் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையையும் திறந்துவிட்டனர்.
சுங்கச் சாவடி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறும்போது, ‘‘நாங்கள் பல ஆண்டுகளாக பணிபுரிகிறோம். ஆனால், எங்களுக்கு எந்த போனஸ் வழங்கவில்லை. சம்பளத்தை கூட சரியான தேதியில் தருவதில்லை. இப்போது எங்களுக்குப் பதில் வேறு ஊழியர்களை பணியமர்த்த போவதாக நிறுவனம் கூறுகிறது’’ என்றனர்.
இதனிடையே, இந்த சுங்கச் சாவடியை நிர்வகிக்கும் சாய் மற்றும் ததார் நிறுவனம் சார்பில் போனஸ் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT