Published : 22 Oct 2025 04:12 AM
Last Updated : 22 Oct 2025 04:12 AM
புதுடெல்லி: ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். அன்று நடைபெற்ற இரவு விருந்தில் அவர் பங்கேற்றார்.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் இந்திய கடற்படையின் முக்கிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தார்.
விமானம் தாங்கி கப்பலில் இருந்து போர் விமானங்கள் புறப்படுவதையும், தரை இறங்குவதையும் ஆர்வத்துடன் அவர் பார்த்து வியந்தார். போர்க் கப்பலிலேயே அன்று இரவு தங்கிய மோடி, நேற்று முன்தினம் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு இனிப்புகளை பிரதமர் மோடி ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
இன்று ஓர் அற்புதமான நாள். ஒரு பக்கத்தில் கடல் உள்ளது. மறுபக்கத்தில், நம் இந்திய தாயின் துணிச்சலான வீரர்களின் பலம் உள்ளது. ஒரு பக்கம் எல்லையற்ற எல்லைகள் உள்ளன. மறுபக்கம், எல்லையற்ற சக்திகளை உள்ளடக்கிய மாபெரும் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளது.
சூரிய கதிர்களால் கடல் நீரில் ஏற்படும் பிரகாசம், நம் துணிச்சலான வீரர்களால் ஏற்றி வைக்கப்படும் தீபாவளி விளக்குகளால் ஏற்பட்டுள்ளது. இந்த முறை, கடற்படையின் துணிச்சலான வீரர்கள் மத்தியில் தீபாவளி கொண்டாடுவதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.
ஐஎன்எஸ் விக்ராந்தில் முந்தைய இரவை நான் கழித்த நினைவுகளை விவரிக்க கடினமாக உள்ளது. அபரிமிதமான ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் வீரர்கள் இருப்பதை கண்டேன். இந்த பெரிய கப்பல், காற்றை விட வேகமாக சீறிப்பாயும் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவை ஆச்சரியமாக தெரிகின்றன.
உங்களிடம் இருந்து கடின உழைப்பு, தவம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை நான் கற்றுக் கொண்டேன். இந்த வாழ்க்கையை வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் இருந்து வீரர்களான உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நாட்டு மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு, விக்ராந்த் என்ற பெயர் பாகிஸ்தான் முழுதும் அச்ச அலைகளை ஏற்படுத்தியது. அங்குள்ளவர்களுக்கு துாக்கமில்லா இரவுகளை தந்தது. அதன் வலிமை அப்படிப்பட்டது. போர் துவங்குவதற்கு முன், எதிரியின் தைரியத்தை உடைக்கும் பெயர் பெற்றது, ஐஎன்எஸ் விக்ராந்த்.
நமது கடற்படையால் உருவாக்கப்பட்ட பயம், விமானப் படையால் வெளிப்படுத்தப்பட்ட அசாதாரண திறமை, நம் ராணுவத்தின் துணிச்சல் என முப்படைகளின் ஒருங்கிணைப்பு, ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை பாகிஸ்தானை விரைவில் சரணடைய வைத்தது. இவ்வாறு அவர் பேசினார்.
போர்க்கப்பலில் இரவு தங்கிய பிரதமர், கடற்படை வீரர்களுடன் இரவு விருந்தில் கலந்துகொண்டார். பின்னர் மறுநாள் காலை ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் யோகா பயிற்சி செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT