Published : 21 Oct 2025 06:32 PM
Last Updated : 21 Oct 2025 06:32 PM
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முசாபர்பூர் மாவட்டத்தின் மினாபூர் தொகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் நிதிஷ் குமார். அப்போது பேசிய நிதிஷ் குமார், "பிஹாரில் மொத்தம் 50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தின் வளர்ச்சிக்காக எனது அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. நான் முதல்வராக பொறுப்பேற்கும் முன்பு இருந்த நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். மாலைக்குப் பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. சமூகத்தில் ஏராளமான மோதல்கள் இருந்தன. மாநிலத்தில் கல்வியின் நிலையும்கூட மோசமாகவே இருந்தது. சில சாலைகள் மட்டுமே இருந்தன. சில வீடுகளுக்கு மட்டுமே மின்சாரம் கிடைத்தது.
அதிகாரத்தில் இருந்தவர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள். மாநிலத்தில் பயங்கரவாத சூழல் நிலவியது. தற்போது நிலைமை எந்த அளவு மாறி இருக்கிறது என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததும் நாங்கள் அனைத்துத் தரப்பின் நலனுக்காகவும் பாடுபட்டோம். தற்போது அச்சம் தரும் சூழல் இல்லை. அன்பு, சகோதரத்துவம், அமைதி ஆகியவை கொண்ட மாநிலமாக பிஹார் உள்ளது. உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாட்டிடங்களில் வேலி அமைக்கும் பணிக்கு நாம் முன்னுரிமை கொடுத்தோம். இதனால், மத மோதல்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இதற்காக மத்திய அரசு மிகப் பெரிய ஒத்துழைப்பை அளித்தது. அதற்காக நான் மத்திய அரசை பாராட்டுகிறேன்.
சூழ்நிலைகள் காரணமாக லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் நான் இரண்டுமுறை கூட்டணி வைக்க வேண்டி இருந்தது. குறுகிய காலம் மட்டுமே அந்த கூட்டணியில் இருந்தேன். அவர்கள் எதற்கும் பயனற்றவர்கள் என்பதை உணர்ந்து கொண்டு நிரந்தரமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பிவிட்டேன்.
அவர் (லாலு பிரசாத் யாதவ்) அதிகாரத்தில் இருந்தபோது பெண்களுக்காக ஏதாவது செய்தாரா? அவர்களுக்கு பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கிடையாது. 7 ஆண்டுகள் முதல்வராக இருந்த அவர், பதவி விலக வேண்டிய நிலை உருவானபோது தனது மனைவியை முதல்வராக்கினார். மற்றபடி, பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற சிந்தனை அவருக்குக் கிடையாது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT