Last Updated : 21 Oct, 2025 01:52 PM

 

Published : 21 Oct 2025 01:52 PM
Last Updated : 21 Oct 2025 01:52 PM

வட கிழக்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைய வாய்ப்பு: 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

புதுடெல்லி: வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிரமான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகவே, கேரளாவில் பரவலாக மழை பெய்யத் தொடங்கி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடையும் வாய்ப்புள்ளது.

பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவிலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோ மீட்டர் வரை மேல் காற்று சுழற்சி நீடிக்கிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 947 கோடி உதவித் தொகையை குஜராத் அரசு அறிவித்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.563 கோடி, மாநில அரசின் பட்ஜெட் நிதியில் இருந்து ரூ. 384 கோடி என மொத்தம் ரூ. 947 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் பயிர் சேதம் அடைந்த 5 மாவட்ட விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x