Last Updated : 20 Oct, 2025 12:51 PM

20  

Published : 20 Oct 2025 12:51 PM
Last Updated : 20 Oct 2025 12:51 PM

'ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

ஐஎன்எஸ் விக்ராந்த கடற்படை கப்பலில் இருந்தவாறு உரையாற்றும் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் ஐஎன்எஸ் விக்ராந்த்தில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி திருநாளைக் கொண்டாடினார்.

அப்போது கடற்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றிய நரேந்திர மோடி, "இன்று ஒரு அற்புதமான நாள். இந்த காட்சி மறக்க முடியாதது. இன்று, எனது ஒரு பக்கத்தில் கடல் உள்ளது. மறுபக்கத்தில், இந்திய தாயின் துணிச்சலான வீரர்களின் பலம் உள்ளது.

ஒரு பக்கம் எல்லையற்ற எல்லைகள் உள்ளன. மறுபக்கம், எல்லையற்ற சக்திகளை உள்ளடக்கிய இந்த மாபெரும் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளது. சூரிய கதிர்களால் கடல் நீரில் ஏற்படும் பிரகாசம், இன்று நமது துணிச்சலான வீரர்களால் ஏற்றி வைக்கப்படும் தீபாவளி விளக்குகளால் ஏற்பட்டுள்ளது. இந்த முறை, கடற்படையின் துணிச்சலான வீரர்களான உங்கள் அவைருக்கும் மத்தியில் இந்த புனித தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவதில் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

ஐஎன்எஸ் விக்ராந்த்தில் நேற்று கழித்த இரவை வார்த்தைகளால் விவரிக்க கடினமாக உள்ளது. அபிரிமிதமான ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் நீங்கள் நிறைந்திருந்ததைக் கண்டேன். நீங்கள் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதையும், உங்கள் பாடல்களில் ஆபரேஷன் சிந்தூரை நீங்கள் விவரித்த விதத்தையும் பார்த்தபோது ஒரு போர்க்களத்தில் நிற்கும் ஒரு வீரர் உணரும் அனுவமாக இருந்தது. அதை வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது.

நான் ராணுவ உபகரணங்களின் வலிமையைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இந்த பெரிய கப்பல்கள், காற்றைவிட வேகமாக சீறிப்பாயும் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை ஆச்சரியமாகத் தெரிகின்றன. ஆனால், அவற்றை உண்மையிலேயே வலிமையானதாக மாற்றுவது அவற்றை இயக்குபவர்களின் தைரியம்தான்.

இந்த கப்பல்கள் இரும்பினால் ஆனதாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அவற்றில் ஏறும்போது அவை ஆயுதப் படைகளின் உயிருள்ள சுவாசிக்கும் படைகளாக மாறுகின்றன. நேற்று முதல் நான் உங்களுடன் இருக்கிறேன். ஒவ்வொரு கணத்திலும் நான் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். நான் டெல்லியை விட்டு கிளம்பும்போது இந்த தருணத்தை நான் வாழ்வேன் என்று நினைத்தேன். ஆனால், உங்கள் கடின உழைப்பு, தவம், அர்ப்பணிப்பு மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதால், அதை என்னால் உண்மையிலேயே வாழ முடியவில்லை. இருப்பினும், அதுபற்றிய புரிதலைப் பெற்றேன். இந்த வாழ்க்கையை வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

உங்கள் அருகில் இருந்து, உங்கள் மூச்சை உணர்ந்து, உங்கள் இதயத்துடிப்பை உணர்ந்து, உங்கள் கண்களில் மின்னுவதைப் பார்த்து நான் ஒரு ஆழமான விஷயத்தை உணர்ந்தேன். நேற்று நான் கொஞ்சம் சீக்கிரமாகத் தூங்கினேன். வழக்கமாக இவ்வளவு சீக்கிரம் நான் தூங்கச் செல்ல மாட்டேன். நான் சீக்கிரமாகத் தூங்கியதற்குக் காரணம், நாள் முழுவதும் உங்களை கவனித்த பிறகு எனக்குள் ஏற்பட்ட திருப்தி உணர்வுதான். அது மனநிறைவின் தூக்கம்.

ஐஎன்எஸ் விக்ராந்தில் இருந்தவாறு நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிக முக்கியமாக, உங்கள் குடும்பங்களுக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்.

எல்லோரும் தங்கள் குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாட விரும்புகிறார்கள். நானும் என் குடும்ப உறுப்பினர்களுடன் தீபாவளியைக் கொண்டாட பழகிவிட்டேன். அதனால்தான், நான் என் குடும்பமாகக் கருதும் உங்கள் அனைவருடனும் தீபாவளியைக் கொண்டாட வந்துள்ளேன். நான் இங்கே என் குடும்பத்தினருடன் தரமான நேரத்தைச் செலவிடுகிறேன். இந்த தீபாவளி எனக்கு உண்மையிலேயே சிறப்பானது.

சில மாதங்களுக்கு முன்பு, விக்ராந்த் என்ற பெயரே பாகிஸ்தான் முழுவதும் அச்ச அலைகளை அனுப்பியதை நாம் கண்டோம். ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளைக் கொடுத்தது. அதன் வலிமை அப்படிப்பட்டது. போர் தொடங்குவதற்கு முன்பே எதிரியின் தைரியத்தை உடைக்கும் பெயர். இது ஐஎன்எஸ் விக்ராந்த்தின் சக்தி. இந்த சந்தர்ப்பத்தில் நான் நமது ஆயுதப் படைகளுக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்.

இந்திய கடற்படையால் உருவாக்கப்பட்ட பயம், இந்திய விமானப்படையால் வெளிப்படுத்தப்பட்ட அசாதாரண திறமை, இந்திய ராணுவத்தின் துணிச்சல் மற்றும் மூன்று படைகளுக்கு இடையிலான மகத்தான ஒருங்கிணபை்பு ஆகியவை பாகிஸ்தானை ஆபரேஷன் சிந்தூரின்போது மிக விரைவாக சரணடைய கட்டாயப்படுத்தின.

கடந்த 10 ஆண்டுகளில் நமது ஆயுதப் படைகள் சுயசார்பு பாரதத்தை நோக்கி விரைவாக நடவடிக்கைகளை எடுத்து வருவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு உற்பத்தி மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இது சுமார் ரூ. 1.5 லட்சம் கோடியை எட்டியது. 2014 முதல் இந்தியா 40க்கும் மேற்பட்ட உள்நாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை கடற்படைக்கு வழங்கியுள்ளது. இப்போது சராசரியாக, ஒவ்வொரு 40 நாட்களுக்கும் ஒரு புதிய உள்நாட்டு போர்க்கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் சேர்க்கப்படுகிறது.

பிம்மோஸ் மேற்றும் ஆகாஷ் போன்ற நமது ஏவுகணைகளும் ஆபரேஷன் சிந்தூரில் தங்கள் திறனை நிரூபித்துள்ளன. பிம்மோஸ் என்ற பெயர் மிகவும் பிரபலமானது. அதைக் கேட்டாலே பலர் பதட்டமடைகிறார்கள், ஆச்சரியப்படுகிறார்கள். உலகின் பல நாடுகள் இந்த ஏவுகணைகளை வாங்க விரும்புகிறார்கள்.

உலகின் முன்னணி பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களில் இந்தியாவும் இடம்பெற வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். கடந்த 10 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு ஏற்றுமதிகள் 30 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளன.

நமது அறிவியல் மற்றும் நமது வலிமை மனித குலத்துக்கு சேவை செய்வதையும் அதைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இன்று உலகின் எண்ணெய் விநியோகத்தில் 66% இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்கின்றன. இந்த பாதைகளைப் பாதுகாப்பதில் இந்தியக் கடற்படை இந்தியக் கடல்களின் பாதுகாவலராகத் திகழ்கிறது" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x