Published : 20 Oct 2025 07:50 AM
Last Updated : 20 Oct 2025 07:50 AM
பாட்னா: பிஹாரின் பாகல்பூரை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் சவுபே. முன்னாள் மத்திய அமைச்சரான இவர் பாகல்பூரில் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். இவரது மகன் அர்ஜித் சரஸ்வத் சவுபே (43). பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அர்ஜித்துக்கு சீட் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாகல்பூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக ரோஹித் பாண்டே என்பவர் அறிவிக்கப்பட்டார். இதற்கு அர்ஜித் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். பாஜக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக பாகல்பூர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அறிவித்தார்.
இதன்படி பாகல்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்கு அர்ஜித் நேற்று முன்தினம் ஆதரவாளர்கள் புடைசூழ சென்றார். வேட்பு மனுவை தாக்கல் செய்வது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தனது மகன் அர்ஜித்தை மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். நிருபர்கள் முன்னிலையில் தனது தந்தையுடன் அர்ஜித் பேசினார். இதன்பிறகு அவர் வேட்புமனுவை தாக்கல் செய்யாமல் வீட்டுக்கு திரும்பினார்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் அர்ஜித் கூறியதாவது: எனது தந்தை மொபைல்போனில் தொடர்பு கொண்டு கண்டிப்பான அறிவுரைகளை கூறினார். பாஜக தலைமையின் உத்தரவை மீறக்கூடாது. கடைசிவரை பாஜகவில் மட்டுமே இருக்க வேண்டும் என்று எனது தந்தை கூறினார். எனது தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை. கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டேன். வரும் தேர்தலில் பாகல்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற உழைப்பேன். இவ்வாறு அர்ஜித் தெரிவித்தார்.
ஏஐஎம்ஐஎம்: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் 100 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் அந்த கட்சியின் சார்பில் 25 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆசாத் சமாஜ் கட்சி, அப்னி ஜனதா கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT