Published : 20 Oct 2025 05:54 AM
Last Updated : 20 Oct 2025 05:54 AM
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் புகழ்பெற்ற கணிதப் பேராசிரியர் கே.சி. சின்ஹா (70) பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் பாட்னாவின் கும்ராஹர் தொகுதியில் சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புகழ்பெற்ற கணிதப் பேராசிரியரான சின்ஹா, அல்ஜீப்ரா, கால்குலஸ், டிரிக்னாமெட்ரி, வெக்டர் ஜியோமெட்ரி உட்பட 70-க்கும் மேற்பட்ட கணித நூல்களை எழுதி உள்ளார். பிஹார் மாநிலம் கைமுர் மாவட்டம் பேயுர் கிராமத்தில் பிறந்த சின்ஹா, சிறு வயதிலிருந்தே படிப்பில் சிறந்து விளங்கினார். பள்ளிப்படிப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அவர், பல்கலைக்கழக அளவிலும் முதலிடம் பிடித்தார்.
குடிமைப் பணி தேர்வில் சில மதிப்பெண்கள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார். பின்னர் கல்லூரி கணித ஆசிரியர் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், பாட்னா பல்கலைக்கழகத்தில் இணைந்தார். அங்கு ரீடர், பேராசிரியர், துறைத் தலைவர், டீன் என படிப்படியாக உயர்ந்தார்.
பின்னர் நாளந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பேற்றார். 2021 முதல் 2024 வரை மேலும் 4 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராகவும் கூடுதல் பொறுப்பு வகித்துள்ளார். இவரது பதவிக் காலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
இந்நிலையில், தனது மாணவரான பிரசாந்த் கிஷோரின் வேண்டுகோளை ஏற்று, கடந்த ஆண்டு அவருடைய ஜன் சுராஜ் கட்சியில் சின்ஹா இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT