Published : 19 Oct 2025 03:32 PM
Last Updated : 19 Oct 2025 03:32 PM
ஹைதராபாத்: பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10–15% பிடித்தம் செய்யும் சட்டம் கொண்டுவரப்படும் என்றும், அந்த தொகை நேரடியாக பெற்றோரின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
நேற்று (அக்டோபர் 18) ஹைதராபாத்தில் உள்ள ஷில்பகலா வேதிகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 783 குரூப்-2 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் விழாவில் பேசிய ரேவந்த் ரெட்டி, “அரசு ஊழியர்கள் யாராவது தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளவில்லை என்றால், அவர்களின் சம்பளத்தில் 10–15% பிடித்து அவர்களின் பெற்றோரின் கணக்கில் டெபாசிட் செய்வேன். இதற்காக நான் ஒரு சட்டத்தைக் கொண்டு வருவேன். உங்கள் சம்பளம் வரவு வைக்கப்பட்டவுடன், உங்கள் பெற்றோரின் கணக்குக்கு சம்பளத்தில் ஒரு பகுதி தானாகவே அவர்களுக்கு மாற்றப்படும்.
புதிதாகப் பணி நியமனம் பெற்ற ஊழியர்களின் வெற்றி அவர்களின் பெற்றோரின் கடின உழைப்பின் விளைவாகும். எனவே உங்கள் பெற்றோரையோ அல்லது உங்கள் சொந்த ஊரையோ மறந்துவிடாதீர்கள். நீங்கள் எந்த அதிகாரப் பதவியில் இருந்தாலும், ஒரு ஏழை உங்கள் முன் நிற்கும்போது, அவர்களை உங்கள் சொந்த பெற்றோராக நினைத்துப் பாருங்கள். உங்கள் பெற்றோரை நீங்கள் கவனித்துக் கொள்ளாவிட்டால், உங்கள் சம்பளத்தில் 10–15% பிடித்தம் செய்யப்படுவதை நான் நிச்சயமாக உறுதி செய்வேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT