Published : 19 Oct 2025 01:54 AM
Last Updated : 19 Oct 2025 01:54 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பஹரைச் மாவட்ட கேசர்கஞ்சின் கிராமங்களில் கடந்த செப்டம்பர் 9 முதல் ஓநாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இமயமலை அடிவாரத்தில் நதிக்கரைகளில் பொதுமக்கள் வாழும் பகுதியில் ஓநாய்கள் தாக்கியதில் 4 குழந்தைகள், ஒரு பெண் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 11 குழந்தைகள் உட்பட 29 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், செப்டம்பர் 27-ம் தேதி நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். பின்னர் அந்தப் பகுதியை வான்வழியாகவும் வன அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
பின்னர், ஓநாய்களை பிடிக்க முடியாவிட்டால் சுட்டுக் கொல்லும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதற்காக, பஹரைச் உள்ளிட்ட மண்டல வன உயரதிகாரி செம்மாறன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழரான செம்மாறன் தலைமையில் 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் ஓநாய் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கால்நடை மருத்துவம் பயின்ற உயரதிகாரி செம்மாறன் கூறும்போது, “குழந்தைகளைக் குறி வைத்து ஓநாய்கள் தாக்குகின்றன. பாதிக்கப்பட்ட 50 குக்கிராமங்களில் வசிக்கும் 40,000 பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி உள்ளோம். வெப் டிரோன் குழு, கண்காணிப்பு குழு, அமைதிப்படுத்தும் குழு, துப்பாக்கிச் சூடு குழு, வலை மூலம் பிடிக்க குழு என 5 வகை குழுக்களும் களம் இறங்கியுள்ளன.
இதில், 4 ஓநாய்கள் பிடிக்கும் போதே இறந்துவிட்டன. கடைசி கட்ட முயற்சியாக ஓநாயை வேட்டையாடவும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரு ஓநாய் காயமடைந்து தப்பிவிட்டது. இன்னொரு ஓநாய் அலைந்து தாக்குதல் நடத்த அவ்வப்போது வருகிறது. இவற்றையும் விரைவில் பிடிப்போம்” என்று அதிகாரி செம்மாறன் கூறினார்.
ஓநாய்கள் தாக்குதலால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த பள்ளிகளை, தீபாவளிக்கு பிறகு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓநாய்களால் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளால் ஓநாய்களால் படுகாயமடைந்த 15 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், ஓநாய்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டும் பஹரைச்சில் ஓநாய்கள் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். தற்போது ஓநாய் தாக்குதலை வனத் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT