Published : 19 Oct 2025 01:24 AM
Last Updated : 19 Oct 2025 01:24 AM
லக்னோ: பிரம்மேஸ் ஏவுகணை தயாரிப்பு மையம் உத்தர பிரதேசம் லக்னோவில் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை யூனிட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
எனது சொந்த தொகுதியான லக்னோவில் 5 மாதங்களுக்கு முன்புதான் பிரம்மோஸ் ஏவுகணை ஆலை தொடங்கப்பட்டது. தற்போது முதல் யூனிட் வெளிவந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை வளர்ச்சியில் இது முக்கியமான நடவடிக்கை. பிரம்மோஸ் ஏவுகணை வெறும் ஆயுதம் மட்டும் அல்ல. இது உள்நாட்டு திறனின் அடையாளம். தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையின் முதுகெலும்பாக பிரம்மோஸ் ஏவுகணை விளங்குகிறது.
பாகிஸ்தான் முழுவதும் பிரம்மோஸ் வரம்புக்குள் உள்ளது. அந்த நாட்டின் எந்த பகுதியையும் தாக்கலாம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதலின் முன்னோட்டத்தை நாம் பார்த்தோம்.
உத்தர பிரதேசம் ஒரு காலத்தில் குண்டர்கள் ஆட்சி நடைபெறும் இடமாக கருதப்பட்டது. ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உ.பி. பிரம்மாண்ட மாற்றத்தை சந்தித்துள்ளது. முதலீடு மற்றும் பாதுகாப்புக்கு சாதகமான சூழல் இங்கு நிலவுகிறது. இங்கு பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மையத்தில் ஆண்டுக்கு சுமார் 100 ஏவுகணை யூனிட்களை தயாரிக்க முடியும். இதன் மூலம் அடுத்த ஆண்டில் ரூ.3,000 கோடி வருவாய் கிடைக்கும்.
பிரம்மோஸ் ஏவுகணைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை செய்தபின் ரூ.4,000 கோடி மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை வாங்க இரண்டு நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. உலகம் முழுவதும் இருந்து நிபுணர்கள், லக்னோ வருவதால், பாதுகாப்பு தளவாட வரைபடத்தில் லக்னோ இடம்பிடித்துள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய, பிரம்மோஸ் ஏவுகணை போன்ற திட்டங்கள் மிக முக்கியமானது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT