Published : 19 Oct 2025 12:29 AM
Last Updated : 19 Oct 2025 12:29 AM
புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து டெல்லியில் நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசும்போது “ஜிஎஸ்டி குறைப்பால் உணவு பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் எலக்ட்ரானிக் பொருள் விற்பனை சாதனை படைத்துள்ளது” என்றார்.
பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஜிஎஸ்டி குறைப்பால் நுகர்வோருக்கு பலன் கிடைத்துள்ளது. கார், ஏசி, வாஷிங் மெஷின், டி.வி. உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பண்டிகை காலத்தில் பைக்குகள், டிராக்டர்கள் விற்பனை வேகமாக உயர்ந்துள்ளது.
அதேபோல் கார்கள் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தீபாவளி பரிசு மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது. உள்நாட்டு பொருட்களுக்கு மக்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் தினசரி பயன்படுத்தும் 54 பொருட்களை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது. அவற்றில் ஒவ்வொன்றிலும், ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் ஏற்படும் வரிச் சலுகை நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தோம். பிரதமரின் தீபாவளி பரிசு அறிவிப்பின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “நவராத்திரியின் முதல் நாளன்று கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரவேற்பை பெற்று இருக்கிறது. அனைத்து தரப்பினரும் பயன் அடைந்து வருகின்றனர். வியாபாரம் அதிகரித்துள்ள அதே நேரத்தில் சேமிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT