Published : 17 Oct 2025 07:15 PM
Last Updated : 17 Oct 2025 07:15 PM
கவுஹாத்தி: அசாம் பாடகர் ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்த விசாரணை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்தார். கடந்த செப்.19-ம் தேதி அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அசாம் கொண்டுவரப்பட்டு கவுஹாத்தி அருகே சோனாபூர் என்ற இத்தில் செப்.23-ம் தேதி தகனம் செய்யப்பட்டது. ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து குவாஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் மாநில அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜுபின் கார்க் தகனம் செய்யப்பட்ட சோனாபூருக்கு வருகை தந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற பிரார்த்தனையிலும் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "சிங்கப்பூரில் ஜுபின் கார்க்-க்கு என்ன நடந்தது என்பதை அவரது குடும்பமும், அசாம் மக்களும் அறிய உரிமை உண்டு. இந்த வழக்கில் உண்மை வெளிவர வேண்டும். அவரது குடும்பத்தினர் இதை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை தேவை" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கவுஹாத்தியில் உள்ள ஜுபின் கார்க்-கின் இல்லத்துக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "ஜுபின் கார்க் இறந்து 28 நாட்களுக்குப் பிறகு ராகுல் காந்தி வந்துள்ளார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அல்லது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேறு யாராவது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். வராமலேயே இருப்பதற்குப் பதில் இப்போதாவது வந்தாரே" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT