Published : 17 Oct 2025 07:27 AM
Last Updated : 17 Oct 2025 07:27 AM
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் ரயில்வே கண்காட்சி தொடங்கியது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த 450 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த கண்காட்சியை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கிவைத்து பேசியதாவது:
வந்தே பாரத் ரயிலின் தரம், வேகம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வந்தே பாரத் 3.0 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் 52 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டவை ஆகும். ஐப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ரயில்களை ஒப்பிடும்போது வந்தே பாரத் ரயில்கள் மிகச் சிறப்பாக உள்ளன. உலகம் முழுவதும் இந்த ரயில்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
அடுத்த 18 மாதங்களில் வந்தே பாரத் 4.0 ரயில்கள் தயாரிக்கப்படும். இந்த ரயில்கள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டவையாக இருக்கும். எனினும் பாதுகாப்பு கருதி 320 கி.மீ. வேகத்தில் இந்த ரயில்கள் இயக்கப்படும்.
கடந்த 11 ஆண்டுகளில், 35,000 கி.மீ. தூரத்துக்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 46,000 கி.மீ. மின்மயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு இருக்கிறது. வரும் 2047-ம் ஆண்டுக்குள் 7,000 கி.மீ. தொலைவுக்கு சிறப்பு ரயில்வே வழித்தடங்கள் அமைக்கப்படும். இந்த வழித்தடங்களில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். இந்தியாவில் தயாரிக்கப்படும் ரயில் இன்ஜின்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் தினமும் 2 கோடிக்கும் அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். சரக்கு ரயில் போக்குவரத்தில் உலகின் 2-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. புல்லட் ரயில் திட்டம் வேகம் பெற்றிருக்கிறது. அமிர்த பாரத் திட்டத்தில் நாடு முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT