Published : 17 Oct 2025 03:36 AM
Last Updated : 17 Oct 2025 03:36 AM
கர்னூல்: 21-ம் நூற்றாண்டு என்பது 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டு ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்னூல் வந்தார். பின்னர், கர்னூல் நன்னூருக்கு ஒரே ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சென்றனர். அங்கு ‘சூப்பர் ஜிஎஸ்டி - சூப்பர் சேவிங்ஸ்’ என்ற பெயரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது காணொலி மூலம் ரூ.13,429 கோடி மதிப்பில் பல்வேறு நலத் திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். சில திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். குறிப்பாக ரூ.9,449 கோடி மதிப்பில் 5 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ரூ.1,704 கோடி செலவில் கட்டப்பட்ட 8 திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.2,276 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 2 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை தெலுங்கில் தொடங்கினார். அதன் பின்னர் இந்தியில் உரையாற்றினார். அவரது பேச்சை மத்திய விமான துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு மொழிபெயர்த்தார். பிரதமர் மோடி பேசியதாவது:
கர்னூலில் குடிகொண்டுள்ள அஹோபிலம் நரசிம்மர், மகா நந்தீஸ்வரர், மந்திராலயம் குரு ராகவேந்திரர் ஆகியோரின் ஆசிகள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். சைலம் ஜோதிர்லிங்கம் மல்லிகார்ஜுனரை தரிசித்ததை எனது ஜென்ம பாக்கியமாக கருதுகிறேன். சத்ரபதி சிவாஜியின் நினைவு மையத்தையும் பார்வையிட்டு அவருக்கு என்னுடைய அஞ்சலியை சமர்ப்பித்தேன்.
நாட்டின் கலாச்சாரத்துக்கு ஆந்திரா மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். ஆந்திராவுக்கு பலமான, திறமையான தலைமையை முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் வழங்கி வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு உள்ளது. கடந்த 16 மாதங்களாக ஆந்திராவில் கூட்டணி அரசு மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறது.
எனக்கு முன்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். அவரது தொலைநோக்கு பார்வையின்படி, 21-ம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாக அமையும்.
இன்றைய தினம் சாலை, மின்சாரம், ரயில்வே, விமான போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் சார்ந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினோம். இது வருங்கால இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதும் ஆகும்.
2 நாட்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் ஆந்திராவில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது. அப்போது, அமெரிக்காவைவிட ஆந்திராவில் அதிகம் முதலீடு செய்வோம் என கூகுள் சிஇஓ என்னிடம் கூறினார். ஏஐ டேட்டா மைய முதலீடு மூலம் விசாகப்பட்டினம் விரைவில் பெரு வளர்ச்சி அடையும். பல நாடுகளில் இருந்து கடல் மூலம் விசாகப்பட்டினம் வரை கேபிள் அமைக்கப்படும். இதில் பல நாடுகள் இணையும். கூகுள் ஏஐ டேட்டா மையத்தால் ஆந்திராவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சி அடையும். இதன் மூலம் சந்திரபாபு நாயுடுவின் ஸ்வர்ணாந்திரா 2047 என்ற கனவு நனவாகும்.
நம் நாட்டின் வளர்ச்சிக்கு, ஆந்திராவின் வளர்ச்சியும் முக்கியம். இதில் ராயலசீமாவின் வளர்ச்சியும் அடங்கும். 21-ம் நூற்றாண்டில் நம் நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று நோக்கி வருகிறது. இதில் ஆந்திராவின் வளர்ச்சியும் நமக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
எடை குறைத்த லோகேஷுக்கு பிரதமர் பாராட்டு: கர்னூல் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் அப்துல் நசீர் அகமது, முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், ஐடி, கல்வித் துறை அமைச்சரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் உட்பட பலர் வரவேற்றனர். அப்போது, அமைச்சர் லோகேஷை பார்த்து பிரதமர் மோடி, “கடந்த முறை பார்த்ததைவிட தற்போது நன்றாக எடை குறைந்து விட்டாய். விரைவில் உன் தந்தையை போல உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வாய் என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார். அதோடு அமைச்சர் நாரா லோகேஷை அவர் தட்டிக் கொடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT