Last Updated : 16 Oct, 2025 05:55 PM

 

Published : 16 Oct 2025 05:55 PM
Last Updated : 16 Oct 2025 05:55 PM

அகமதாபாத் விமான விபத்து: விசாரணை பாரபட்சமாக உள்ளதாக விமானியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு

மறைந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை

புதுடெல்லி: கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை, தற்போதைய விசாரணை பாரபட்சமானது என்றும், நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளாகி 241 பயணிகள் உட்பட 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் விமானத்தின் விமானியாக இருந்த மறைந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை, விபத்து குறித்து நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) உடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தில் (AAIB) நடந்து வரும் விசாரணையை அவர் முடிக்கக் கோரியுள்ளார்.

அரசியலமைப்பின் பிரிவு 32 இன் கீழ் அக்டோபர் 10 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விமான நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு விபத்து குறித்து நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தயாரித்த முதற்கட்ட அறிக்கை “குறைபாடுள்ளது, பாரபட்சமானது மற்றும் முழுமையற்றது" என்று அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த அறிக்கையில், விபத்துக்கான காரணம் ‘விமானியின் பிழை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கு காரணமான கடுமையான தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணிகள் குறித்து ஆராயப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் சபர்வாலின் தந்தை புஷ்கர் ராஜ் சபர்வால் மற்றும் 6,000க்கும் மேற்பட்ட விமானிகளைக் கொண்ட இந்திய விமானிகள் கூட்டமைப்பு ஆகியோர் இந்த வழக்கில் தற்போதைய விசாரணையை நிறுத்திவிட்டு, அனைத்து பதிவுகளையும் நீதித்துறையால் கண்காணிக்கப்படும் குழுவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு சுயாதீனமான, நிபுணர் தலைமையிலான விசாரணையால் மட்டுமே பொறுப்புணர்வை உறுதிசெய்யவும், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் முடியும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக விபத்து இல்லாத விமானப் பயணத்தையும், 15,000 மணி நேர விமானப் பணி அனுபவத்தையும் கொண்டிருந்த கேப்டன் சபர்வால், போயிங் 787 விமானங்களின் இயக்கத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடந்து வரும் விசாரணை விபத்தில் இறந்த விமானிக்கு எதிராக பாரபட்சமாக நடத்தப்பட்டுள்ளதாகவும், இது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மட்டுமல்லாமல், விபத்துக்கான உண்மையான காரணத்தை அடையாளம் காணத் தவறி பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x