Published : 07 Aug 2018 10:35 PM
Last Updated : 07 Aug 2018 10:35 PM
கருணாநிதியின் உடல் அடக்கத்திற்கு இடம் ஒதுக்குவதில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது என தான் எதிர்பார்ப்பதாக காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். கருணாநிதி தமிழகத்திற்கு செய்த தியாகங்களை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கருணாநிதியின் மறைவு குறித்து டெல்லியில் பேசுகையில், ''இன்று நாம் நாட்டின் உயர்ந்த தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டோம். முதுபெரும் தலைவர்களில் ஒருவரை நாடு இழந்துள்ளது. அவர் தமிழகம் மட்டும் அன்றி நாடு முழுவதிலும் மதிக்கக் கூடியவராக இருந்தவர். சுமார் 14 முறை எம்எல்ஏவாகவும், 10 முறை திமுக தலைவராகவும் இருந்தவர். அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினம்.
இளைஞர் காங்கிரஸ் தலைவராக நான் இருந்தது முதல் அவரது குடும்பத்தினர் அனைவரையும் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர்களுடன் சேர்த்து எனக்கும் இது தாங்க முடியாத இழப்பாகும். குடும்பத்தார் அனைவரும் கருணாநிதியின் மறைவால் பெற்ற துயரில் இருந்து மீள நான் பிரார்த்திக்கின்றேன். மீண்டும் நான் தமிழகம் சென்று கருணாநிதியைச் சந்திக்க முடியாது என்பதை என்னால் நம்ப முடியவில்லை'' எனத் தெரிவித்தார்
சமாதிக்கு இடமளிப்பதில் அரசியல் கூடாது
மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்வதன் மீதான கேள்விக்கு பதிலளிக்கையில் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ''கருணாநிதியின் அடக்கத்திற்கு இடமளிப்பதில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது என எதிர்பார்க்கிறேன். தேசியத் தலைவரான. கருணாநிதி தமிழகத்திற்கு செய்த தியாகங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். இதுபோன்ற தருணங்களில் அரசும், மற்ற கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும். எனவே, கலைஞரின் உடல் அடக்கத்திற்கு உகந்த இடம் அளிக்கப்பட வேண்டும் தனது மறைவிற்கு பிறகும் அதற்கான தகுதியைப் பெற்றவர் அவர்'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT