Published : 15 Oct 2025 12:52 PM
Last Updated : 15 Oct 2025 12:52 PM
புதுடெல்லி: “நடைபெறவிருக்கும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறேன் ” என ஜன்சுராஜ் கட்சியின் வேட்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலின்போது 121 தொகுதிகளுக்கும். 2-ம் கட்டத் தேர்தலின்போது 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணியும் பிரதான போட்டியாளர்களாக களத்தில் உள்ளன.
இம்முறை பிஹார் சட்டப்பேரவை தேர்தல் சற்று சூடுபிடிக்கும் என்று கருதப்படுகிறது. தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்து, அரசியல்கட்சி தலைவராக பிரவேசம் எடுத்துள்ள பிரசாந்த் கிஷோர் ஜன்சுராஜ் கட்சியின் தலைவராக உள்ளார். தனது சொந்த தொகுதியான கர்கஹார் அல்லது ரகோபூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்பு அறிவித்திருந்தார்.
ஆனால், தற்போது ராகோபூர் தொகுதிக்கு ஜன் சுராஜ் கட்சி சஞ்சல் சிங்கை வேட்பாளராக அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. ரகோபூர் தொகுதி என்பது தேஜஸ்வி யாதவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்ஜேடி கோட்டை. இங்கு அவர் போட்டியிட்டிருந்தாலும் கடுமையான போட்டியை எதிர்கொண்டிருப்பார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர், இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், வரவிருக்கும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. கட்சி பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறேன். அனைத்து தொகுதிகளிலும் ஜன்சுராஜ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறேன்.
பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை தழுவும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள். நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெறுவதற்கு கூட கடுமையாக போராட வேண்டியதாக இருக்கும். நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக வர வாய்ப்பில்லை. இண்டியா கூட்டணியின் நிலைமையும் தற்போது சரியாக இல்லை.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் குறைந்தது 150 இடங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்கும் குறைவான இடங்களில் வென்றாலும் அது எங்களுக்கு தோல்விதான்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT