Published : 15 Oct 2025 07:38 AM
Last Updated : 15 Oct 2025 07:38 AM
புதுடெல்லி: கடன் அட்டை என்பது கடனாக பொருட்களை வாங்கவும் பல்வேறு கட்டணங்களை செலுத்தவும் மட்டுமே பயன்படும் என நாம் நினைக்கிறோம். ஆனால் வழக்கமான பயன்பாடுகளைத் தாண்டி, பணத்தை மிச்சப்படுத்துவதற்கான ஆதாரமாகவும் அவற்றைப் பயன்படுத்தி வருகிறார் மணிஷ் தமேஜா. அவரிடம் மொத்தம் 1,638 கடன் அட்டைகள் உள்ளன.
எந்த ஒரு கடனும் இல்லாமல் வெகுமதி புள்ளிகள், கேஷ்பேக், பயணச் சலுகைகள் மற்றும் ஓட்டல் சலுகைகளை அதிகரிக்க இந்த கடன் அட்டைகளை அவர் பயன்படுத்தி வருகிறார். எந்த ஒரு கடன் அட்டையிலும் அவருக்கு கடன் இல்லை. அதிக கடன் அட்டைகளை வைத்திருப்பதற்காக மணிஷ், கடந்த 2021, ஏப்ரல் 30-ம் தேதி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இதுகுறித்து மணிஷ் கூறும்போது, “கடன் அட்டைகள் இல்லாமல் என் வாழ்க்கை முழுமை அடையாது என நினைக்கிறேன். எனக்கு கடன் அட்டைகள் மிகவும் பிடிக்கும். இலவச பயணம், ரயில்வே லவுஞ்ச், விமான நிலைய லவுஞ்ச், உணவு, ஸ்பா, ஓட்டல் வவுச்சர்கள், இலவச உள்நாட்டு விமான டிக்கெட்கள், இலவச திரைப்பட டிக்கெட்கள், இலவச எரிபொருள் போன்றவற்றை மைல்கற்களை எட்டியும், வெகுமதி புள்ளிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை பயன்படுத்தியும் அனுபவிக்கிறேன்.
கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது புதிய ரூபாய் நோட்டுக்காக ஏடிஎம்களில் வரிசையில் நின்று நான் சிரமப்படவில்லை. கடன் அட்டைகளை பயன்படுத்தி செலவிட்டேன்” என்றார். செலவு செய்வதற்கான கருவிகளைக் கூட புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால், அவற்றை பணத்தை மிச்சப்படுத்துவதற்கான கருவியாக மாற்ற முடியும் என்பதை மணிஷின் கதை நமக்கு உணர்த்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT