Published : 14 Oct 2025 04:02 PM
Last Updated : 14 Oct 2025 04:02 PM
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 71 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலின்போது 121 தொகுதிகளுக்கும். 2-ம் கட்டத் தேர்தலின்போது 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணியும் பிரதான போட்டியாளர்களாக களத்தில் உள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு கடந்த 12-ம் தேதி நிறைவடைந்தது. அதன்படி, பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகியவை தலா 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், 71 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை பாஜக இன்று (அக்.14) வெளியிட்டுள்ளது. துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தாராபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மற்றொரு துணை முதல்வரான விஜய் குமார் சின்ஹா, லக்கிசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். பாகல்பூர் தொகுதியில் ரோஹித் பாண்டேவையும், பெகுசராய் தொகுதியில் குந்தன் குமாரையும் பாஜக களத்தில் இறக்குகிறது.
பாஜகவின் முதல் கட்ட பட்டியலில் 9 பெண் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பிஹாரின் கால்நடை மற்றம் மீன்வளத்துறை அமைச்சரான ரேணு தேவி, பேட்டியா தொகுதியில் போட்டியிடுகிறார். ஸ்வீட்டி சிங் கிஷன்கஞ்ச் தொகுதியிலும், காயத்ரி தேவி பரிஹார் தொகுதியிலும், தேவந்தி யாதவ் நர்பட்கஞ்ச் தொகுதியிலும், ரமா நிஷாத் ஆராய் தொகுதியிலும், நிஷா சிங் பிராந்த்பூர் தொகுதியிலும், கவிதா தேவி கோர்தாவிலும், அருணா தேவி வார்சாலிங்கஞ்ச்சிலும், ஷ்ரேயாசி சிங் ஜமாய் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.
எனினும், பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நந்த கிஷேோர் யாதவின் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நந்த கிஷோர் யாதவ், "பாஜகவின் முடிவை நான் ஆதரிக்கிறேன். பாஜக எனக்கு நிறைய கொடுத்துள்ளது. கட்சி மீது எனக்கு எந்த புகாரும் இல்லை. புதிய தலைமுறையை வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்.
பாட்னா சாஹிப் சட்டமன்றத் தொகுதி மக்கள் எனக்கு அளித்த அன்பை ஒருபோதும் மறக்க மாட்டேன். அவர்கள் என்னை 7 முறை தொடர்ச்சியாக வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என தெரிவித்துள்ளார்.
மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் நவ.14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT