Published : 13 Oct 2025 07:56 AM
Last Updated : 13 Oct 2025 07:56 AM
திருவனந்தபுரம்: கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் இதுவரை 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2023-ம் ஆண்டு கோழிக்கோடு நகரைச் சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் விவரங்களை கட்டாயமாக பதிவு செய்வதுடன் அதற்கான காரணங்களைக் கண்டறியவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 2024 முதல் மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு குறித்து பதிவு செய்யப்பட்டது. இதில் சிலருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு மூளையை உண்ணும் அமீபா தொற்று காரணம் என தெரியவந்தது.
அந்த வகையில் இதுவரை 104 பேருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பு காணப்படுகிறது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலும் இந்த பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.
ஒன் ஹெல்த் திட்டம்: அமீபா தொற்றை முன்கூட்டியே கண்டறியவும் தொற்று பரவுவதைத் தடுக்கவும் 'ஒன் ஹெல்த்' என்ற திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது கேரளாவில் இந்த நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் வீணா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT