Published : 13 Oct 2025 12:26 AM
Last Updated : 13 Oct 2025 12:26 AM
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ), பாஜக தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6, 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணிக்கும் (என்டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கியமெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பிஹாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், என்டிஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த உயர்நிலை ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று பல்வேறு கட்டமாக நடைபெற்றது. முதல்கட்டமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் நடந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள் சஞ்சய் ஜா, லல்லன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வீட்டில் பாஜக உயர்நிலை தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு, பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா, தர்மேந்திர பிரதான், பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி என்டிஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 101, லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் (எல்ஜேபி-ஆர்) 29 , ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) 6 , இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. கூட்டணியின் அனைத்து தலைவர்களும், தொண்டர்களும் தொகுதிப் பங்கீட்டை முழுமனதுடன் வரவேற்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிஹார் முன்னாள் முதல்வரும், எச்ஏஎம் கட்சி தலைவருமான ஜிதன்ராம் மாஞ்சி அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அவர் தனது வலைதளப் பதிவில், ‘எனது கடைசி மூச்சு உள்ளவரை பிரதமர் மோடியுடன் இருப்பேன்’ என்று கூறியுள்ளார். ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) கட்சி கடந்த தேர்தலில் 99 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டும், எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அந்த கட்சி தற்போது என்டிஏ கூட்டணியில் இணைந்து, வெற்றி வாய்ப்புள்ள 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மெகா கூட்டணியில் குழப்பம்: இதற்கிடையே, மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. காங்கிரஸின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றதாக தகவல் வெளியானது. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கடந்த 2024 அக்டோபர் 2-ம் தேதி ஜன் சுராஜ் கட்சியை தொடங்கினார். இந்த கட்சி தற்போது தனித்துப் போட்டியிடுகிறது. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகியவையும் தனித்துப் போட்டியிடுகின்றன. ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ் ஆகியவை தலா 100 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளன. ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT