Last Updated : 12 Oct, 2025 03:34 PM

1  

Published : 12 Oct 2025 03:34 PM
Last Updated : 12 Oct 2025 03:34 PM

அச்சமற்ற சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண்: சி.பி.ஆர் புகழாரம்

புதுடெல்லி: பிஹாரின் சோசலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அச்சமற்ற சுதந்திரப் போராட்ட வீரர் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார். இவர், ஜெயப்பிரகாஷ் நாராயணின் 123 ஆவது பிறந்தநாள் அவரது பிஹார் இல்லம் சென்றார்.

சோசலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு, பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சிதாப் தியாராவில் உள்ள ஜெயபிரகாஷ் இல்லத்துக்கு, குடியரசு துணைத் தலைவர் சிபிஆர் நேரில் சென்றார். அங்கு, ஜெயபிரகாஷ் நாராயண் கிராமத்தில் உள்ள அவரது தேசிய நினைவுச் சின்னத்திற்கு அவர் மலர் அஞ்சலி செலுத்தினார். சோசலிசத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஜெயபிரகாஷ் நாராயணின் மனைவியின் பெயரிடப்பட்ட புத்தகக் கடையான ‘பிரபாவதி புஸ்தகலயா’வையும் அவர் பார்வையிட்டார்.

இதனிடையே, தனது 19 வயதில், 1974ம் ஆண்டு நாராயண் தொடங்கிய ‘சம்பூர்ண கிராந்தி’ (முழு புரட்சி) நிகழ்ச்சியில் தான் இணைந்திருந்ததாக குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று தலைநகர் பாட்னாவிற்கு விமானத்தில் வந்தார். பிஹாரின் ஜெயபிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் அவரை வரவேற்றார்.

பின்னர், சரண் மாவட்டத்தின் சீதாப் தியாராவிற்கு அவர் கிளம்பினார். சிதாப் தியாராவைப் பார்வையிடுவதற்கு முன்பு, அவர் தனது எக்ஸ் பதிவில், ‘நாட்டின் மக்கள் நாயகரான ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த நாளில், ஜனநாயகத்தின் உண்மையான வீரரின் மரபை நான் மதிக்கிறேன். அவர் ஒரு அச்சமற்ற சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி. தொலைநோக்கு பார்வையாளரான ஜெயபிரகாஷ் நாராயண் தனது வாழ்க்கையை தேச சேவைக்காக அர்ப்பணித்தார்.

எனது 19வது வயதில் அவரது முழுமையான புரட்சிக்கான அழைப்பில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அதில் முழு வீரியத்துடன் பங்கேற்றேன். அவரது மரபு எப்போதும் நமது முன்னோக்கிச் செல்லும் பாதையை ஒளிரச் செய்யட்டும். அவரது தொலை நோக்குப் பார்வையும் லட்சியங்களும் என்னையும் எண்ணற்ற மற்றவர்களையும் நீதியான மற்றும் சுதந்திரமான இந்தியாவுக்காகப் பாடுபடத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகின்றன" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஜெ.பி என்றும் அழைக்கப்படும் ஜெயபிரகாஷ் நாராயண், 1970-களில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக எதிர்க்கட்சியை வழிநடத்தியவர். 1999-ல், நாராயணனின் சமூக சேவைக்காக, நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. 1920-ம் ஆண்டு 18 வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வை முடித்த பிறகு, ஜே.பி பாட்னாவில் பணிபுரியத் தொடங்கினார்.

அதே ஆண்டில் பிரபாவதியை மணந்தார். தேசியவாதத் தலைவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் தனது ஆங்கிலக் கல்வியைக் கைவிடுமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின் பேரில், அவர் பாட்னா கல்லூரியை தனது தேர்வுக்கு 20 நாட்களுக்கு முன்பு விட்டுச் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x